எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத வளர்ச்சியை பெற்ற மாருதி! அடங்கப்பா இவ்வளவு கார் வித்திருச்சா?
ஜூலை மாதம் பிறந்து விட்ட நிலையில் வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டு வரும் நிலையில், மாருதி நிறுவனமும் தற்போது ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனம் கடந்த மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. முக்கியமாக சில செக்மென்ட் வாகனங்கள் விற்பனையில் வீழ்ச்சியையும் சில செக்மெண்ட் வாகனங்கள் விற்பனையில் வளர்ச்சியும் பெற்றுள்ளது. இப்படியாக ஒவ்வொரு செக்மெண்டிலும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த ஜூன் மாதம் மாருதி நிறுவனம் மொத்தமாக1,37,160 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம்1,33,027 வாகனங்களை தான் விற்பனை செய்துள்ளது. தற்போது கூடுதலாக 4133 வாகனங்கள் விற்பனையாகி 3.11% அளவிற்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதுவே கடந்த மே மாதம் இந்நிறுவனம் மொத்தம் 1,44,002 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும்போது ஜூன் மாதம் 6842 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி, 4.75% அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாருதி நிறுவனம் மினி செக்மெண்டில் ஆல்டோ மற்றும் எக்ஸ்பிரெஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் இந்நிறுவனம் 9395 கார்களை இந்த செக்மெண்டில் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14,054 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனை கணிசமான அளவு குறைந்துள்ளது.
இந்த நிதியாண்டில் முதல் மூன்று மாத விற்பனை விபரங்களின்படி இந்நிறுவனம் இந்த செக்மெண்டில் 30,816 வாகனங்களை விற்பனை செய்துள்ளது கடந்தாண்டு இதே முதல் மூன்று மாத விற்பனையில் 40,400 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செக்மெண்டில் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

அடுத்ததாக காம்பேக்ட் செக்மெண்ட் இந்த செக்மெண்டில் பலேனோ, செலிரியோ, டிசையர், மற்றும் வேகன்ஆர் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன0 ஜூன் மாதம் 64,049 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 64,471 கார்கள் விற்பனையாகி இருந்தது. பெரிய அளவில் விற்பனை வீழ்ச்சி அடையவில்லை.
இதுவே கடந்த மூன்று மாத விற்பனை விபரங்களை பார்க்கும்போது இந்த செக்மெண்டில் 1,89,208 வாகனங்கள் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு 2,10,825 வாகனங்களும் விற்பனையாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஓரளவு கடந்த மூன்று மாதத்தில் இந்த செக்மெண்டிலும் சரிவு ஏற்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

அடுத்து மிட்-சைஸ் செக்மெண்டில் இந்நிறுவனம் சியாஸ் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் கடந்த ஜூன் மாதம் 572 விற்பனையாகியுள்ளன. இதே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 1744 கார்கள் விற்பனையாகியுள்ளன. மிகப்பெரிய சரிவை இந்த கார் சந்தித்துள்ளது. கடந்த மூன்று மாத விற்பனையையும் பார்க்கும் போது 2,169 கார்கள் இந்த ஆண்டிலும் கடந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் 3753 கார்கள் விற்பனையாகி உள்ளன.
யூட்டலிட்டி வாகனத்தை பொறுத்த வரை கடந்த மாதம் 52,373 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 43,404 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. இந்த செக்மெண்டில் விற்பனை கணிசமான அளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த செக்மெண்டில் பிரெஸ்ஸா,எர்டிகா,ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி எக்ஸ்எல் 6 ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன.
இந்த செக்மெண்டில் கடந்த மூன்று மாத விற்பனை பார்க்கும்போது மொத்தம் 1,63,130 வாகனங்கள் இந்த ஆண்டில் விற்பனையாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் 1,26,401 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. கடந்த மூன்று மாதமாக சிறப்பான வளர்ச்சியை இந்த செக்மெண்ட் பெற்றுள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது.
வேன்களை பொருத்தவரை மாருதி நிறுவனம் ஈக்கோ என்ற வாகனத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 10,771 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 9354 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த மூன்று மாத விபரங்களை பார்க்கும்போது 33791 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் முதல் மூன்று மாதங்கள் 32,676 கார்கள் தான் விற்பனையாகி இருந்தன.
இறுதியாக கமர்சியல் வாகன செக்மண்டில் இந்நிறுவனம் சூப்பர் கேரியை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 2758 வாகனங்களை இந்த செக்மெண்டில் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 2992 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த மூன்று மாத விற்பனை விபரங்களை பார்க்கும்போது, 7946 வாகனங்களை இந்த ஆண்டிலும் 8,079 வாகனங்களை கடந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்திலும் விற்பனை செய்துள்ளது.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை விபரங்களை பார்க்கும்போது மாருதி நிறுவனம் 1,37,160 வாகனங்களை கடந்த ஜூன் மாதம் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. 31,033 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது 8,277 வாகனங்களை டொயோட்டா நிறுவனத்திற்காக தயாரித்து கொடுத்துள்ளது.மாருதி டொயோட்டா நிறுவனங்களுக்கிடையே வாகன பகிர்வு ஒப்பந்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் மீது சில ஆண்டுகள் முன்பு வரை எஸ்யூவி கார்களை விற்பனை செய்வதில் மந்தம் காட்டி வருவதாக மிகப்பெரிய புகார்கள் எழுந்து வந்தது. அதையெல்லாம் உடைத்து எரியும் வகையில் தற்போது மாதிரி நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் தான் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகின்றன. இதனால் யாரும் குறை சொல்ல முடியாத ஒரு வளர்ச்சியை இந்த நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









