மாருதியின் இந்த காரை இயக்க பெட்ரோல், டீசல், மின்சாரம்னு எதுவுமே தேவையில்ல.. ஏன் சிஎன்ஜிகூட தேவையில்ல..
இந்தியர்களின் பிரியமான எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றே மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இந்த காரையே தனித்துவமான எரிபொருளில் இயங்கும் வாகனமாக அந்நிறுவனம் (மாருதி சுஸுகி) உருவாக்கி இருக்கின்றது. அதாவது, பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என இதுபோன்ற எந்தவொரு வழக்கமான எரிபொருளும் தேவைப்படாத வாகனமாகவே பிரெஸ்ஸாவை மாருதி சுஸுகி தயார் செய்திருக்கின்றது.
"அப்படி என்றால் இந்த கார் தானாகவா ஓடும்?" என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பி இருக்கக் கூடும். இல்லை இந்த வாகனம் இயங்கும் ஓர் எரிபொருள் தேவைப்படுகின்றது. அது பயோமீத்தேன் வாயு ஆகும். ஆமாங்க, இந்த எஸ்யூவி கார் இயங்க பயோமீத்தேன் வாயுவே முக்கியமான தேவை ஆகும்.

குறிப்பு: படம் உதாரணத்திற்காக வழங்கப்பட்டது. ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களைத் தொடர்ந்து மாருதி சுஸுகி தற்போது பயோமீத்தேனில் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பிலும் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு சான்றாகவே அதில் இயங்கும் காரை தற்போது மாருதி சுஸுகி வெளியீடு செய்திருக்கின்றது. இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியிலேயே மாருதி சுஸுகி தன்னுடைய தனித்துவமான வசதிக் கொண்ட இந்த பிரெஸ்ஸா காரை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த எக்ஸ்போவில் பயோமீத்தேன் கேஸில் இயங்கும் பிரெஸ்ஸாவுடன் சேர்த்து இன்னும் சில எதிர்கால கார் மாடல்களையும் அது காட்சிப்படுத்தியது.
அந்தவகையில், நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு வரவிருக்கும் முதல் மின்சார காராக கருதப்படும் இவிஎக்ஸ் மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வேகன்ஆர் ஆகிய கார் மாடல்களும் இந்த பொதுவெளியில் வைத்தே காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த கார்கள் இதற்கு முன்னதாக நடைபெற்ற சில உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி நிகழ்ச்சிகளில் மாருதி காட்சிப்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், பயோமீத்தேன் பிரெஸ்ஸா காட்சிக்குள்ளாவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், இந்த கார் இந்தியர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. ஆனால், இந்த காரின் விற்பனைக்கான வருகை பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் மாருதி சுஸுகி வெளியிடவில்லை.
அதேவேளையில் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்கிற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மாருதி சுஸுகி பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களைத் தொடர்ந்து அடுத்ததாக ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு அடுத்தபடியாக மின்சார வாகனமே நிறுவனத்தின்கீழ் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்தே அந்நிறுவனம் பயோமீத்தேன் போன்ற பிற மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களை நாட்டில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னுடைய 1.5 லிட்டர் கே15சி 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரையே பயோமீத்தேனில் இயங்கும் மோட்டாராக மாருதி சுஸுகி மாற்றி இருக்கின்றது. இந்த எஞ்சின் 102 பிஎச்பி மற்றும் 137 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
ஆனால், சிபிஜியில் இயங்கும்போது சிஎன்ஜி-யைப் போல குறைந்த திறனையே அது வெளியேற்றும். அந்தவகையில் 87 பிஎச்பி மற்றும் 121 என்எம் டார்க்கையே அது வெளியேற்றும். இந்த மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் பயோ மீத்தேன் பிரெஸ்ஸாவில் எதிர்பார்க்க முடியாது. இதற்கு சான்றாக தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் கான்செப்ட் மாடல் இருக்கின்றது.
இது அப்படியே வழக்கமான பிரெஸ்ஸாவை உறித்து வைத்ததைப் போல் இருக்கின்றது. ஆகையால், உள் மற்றும் வெளிப்புற தோற்றத்தில் இவற்றிற்கு இடையில் எந்தவொரு பெரிய வித்தியாசமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், பயோமீத்தேன் வாயு மட்டுமின்றி, பெட்ரோலில் இயங்கும் திறனும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்த காரும் சிஎன்ஜி கார் மாடல்களையே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி மற்றும் டாடா இந்த இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி புதிதாக பயோமீத்தேன் வாயுவில் இயங்கும் வாகனங்களைக் களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








