ரத்தன் டாடா மரணம், கார்கள் விற்பனை சரிவு... டாடா மோட்டார்ஸுக்கு நேரம் சரியில்ல!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான கார்களை அசால்ட்டாக விற்பனை செய்து வருகிறது. இருப்பினும், சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனையை பொறுத்தவரையில், மாருதி சுஸுகிக்கு ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் கடுமையான போட்டியாக விளங்குகின்றன. இருப்பினும், கடந்த 3 மாதங்களில் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனையில் டாடா மோட்டாட்ர்ஸை வெற்றிக்கரமாக மாருதி சுஸுகி முந்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் மற்றும் பஞ்ச் கார்கள் மார்க்கெட்டில் பெரிய வெற்றி பெற்றுள்ளன. மேலும், டாடா நெக்ஸான் மற்றும் பஞ்ச் கார்கள் எலக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மூலமாகவே சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் பிரிவில் மாருதி சுஸுக்கு டாடா மோட்டார்ஸ் சவாலாக விளங்கி வருகிறது. சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் என்பன 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் ஆகும்.

இந்த பிரிவில், மாருதி சுஸுகியில் இருந்து பிரெஸ்ஸா, ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி என 3 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த 3 மாருதி கார்களால் 2 டாடா கார்களின் விற்பனையை முந்த முடியாமல் இருந்தது. ஆனால், கடந்த 3 மாத (2024 ஜூலை- செப்டம்பர்) விற்பனையில் வெற்றிக்கரமாக டாடா மோட்டார்ஸை மாருதி சுஸுகி முந்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் வரையில் மொத்தம் 83,136 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இதில், டாடா பஞ்ச் கார்களின் எண்ணிக்கை 45,475 மற்றும் நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 37,661 ஆகும். ஆனால், மாருதி சுஸுகி நிறுவனம் இந்த 3 மாதங்களில் மொத்தம் 89,994 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்த வகையில் பார்த்தால், கடந்த 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸை காட்டிலும் 6,858 சப்-4 மீட்டர் கார்களை மாருதி சுஸுகி அதிகமாக விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகி கடந்த 3 மாதங்களில் விற்பனை செய்த 89,994 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களில் 49,188 பிரெஸ்ஸா கார்கள், 37,186 ஃப்ரான்க்ஸ் கார்கள் மற்றும் 3,620 ஜிம்னி வாகனங்கள் அடங்குகின்றன.
கடந்த 2024 செப்டம்பர் மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தாலும், மாருதி சுஸுகியின் கை ஓங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 15,322 பிரெஸ்ஸா கார்கள், 13,874 ஃப்ரான்க்ஸ் கார்கள் மற்றும் 599 ஜிம்னி வாகனங்கள் என மொத்தமாக சேர்த்து 29,795 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. அதுவே மறுப்பக்கம், டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் 25,181 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இதில் 13,711 பஞ்ச் கார்கள் மற்றும் 11,470 நெக்ஸான் கார்கள் அடங்குகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான அந்த 3 மாதங்களை கணக்கில் எடுத்து பார்த்தால், டாடா மோட்டார்ஸை காட்டிலும் பல ஆயிரம் குறைவாக சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 9 ஆயிரம் கார்களை மாருதி சுஸுகி குறைவாக விற்பனை செய்திருந்தது.
அந்த 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கை 91,036 மற்றும் மாருதி சுஸுகியின் விற்பனை எண்ணிக்கை 82,138 ஆகும். இதற்கு முந்தைய 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக கடந்த 1 வருடத்தில் டாடா மோட்டார்ஸ் 3 லட்சத்து 64,344 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களையும், மாருதி சுஸுகி 3 லட்சத்து 35,764 கார்களையும் விற்பனை செய்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸுக்கு இடையேயான இந்த விற்பனை எண்ணிக்கைகளில் பெரிய அளவிலான வித்தியாசம் இருப்பதை கவனிக்கலாம். ஏனெனில், இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் என தொடர்ச்சியாக 3 மாதங்களில் இந்தியாவின் நம்பர் ஒன் காராக டாடா பஞ்ச் அதிகமாக விற்பனை ஆகியது. தற்போது மாருதி சுஸுகியின் கை ஓங்க ஆரம்பித்துள்ளதால், இனி வரும் மாதங்களில் இந்த விற்பனை எண்ணிக்கைகளில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









