ஷோரூம்களில் பயங்கர கூட்டம்... புது மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க அலை கடலென குவியுறாங்க!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம். இந்திய மக்கள் அதிக பேர் விரும்பி வாங்கும் பல கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்துதான் விற்பனை செய்யப்படுகின்றன. எந்த அளவிற்கு என்றால், இந்தியாவின் டாப்-10 கார்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் மாருதி சுஸுகி கார்கள் குறைந்தது 6- 7ஆவது இருக்கும். அந்த அளவிற்கு இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஆதிக்கத்தை கொண்டுள்ள மாருதி சுஸுகியில் இருந்து கடந்த 2024 மே மாதத்தில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகியில் இருந்து கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார் ஸ்விஃப்ட் ஆகும். விலை குறைவான ஹேட்ச்பேக் காரான இது மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை பிடித்துள்ளது.

இதற்கு முந்தைய ஏப்ரல் மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக டாடா பஞ்ச் தொடர்ந்து 2 மாதங்களாக முதலிடம் பிடித்துவந்தது. ஆனால், கடந்த மே மாத விற்பனையில் டாடா பஞ்ச் கார்களுக்கும் அதிகமாக ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்களின் எண்ணிக்கை 19,393 ஆகும்.
அதுவே, கடந்த ஆண்டு மே மாதத்தில் 17,346 ஸ்விஃப்ட் கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. ஸ்விஃப்ட்டிற்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக 2வது இடத்தில் டிசைர் உள்ளது. இந்தியாவில் 10 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு செடான் ரக காரான டிசைர் கடந்த மே மாதத்தில் 16,061 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2023 மே மாதத்தில் 11,315 டிசைர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், இந்த ஆண்டு மே மாதத்தில் சுமார் 4,746 டிசைர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 3வது இடத்தில் மாருதி சுஸுகியின் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் 14,492 கார்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டில் இதே மே மாதத்தில் 16,258 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
பிரெஸ்ஸா இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. 2023 மே மாதத்தில் 13,398 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் 14,186 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5வது இடத்தை மாருதி சுஸுகி எர்டிகா தனதாக்கி உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி காராக விளங்கும் எர்டிகா கடந்த மாதத்தில் 13,893 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2023 மே மாதத்தில் 10,528 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 6வது மற்றும் 7வது இடங்களில் முறையே பலேனோ மற்றும் ஃப்ரான்க்ஸ் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 12,842 மற்றும் 12,681 ஆகும். இதில், பலேனோ ஆனது கடந்த ஆண்டு மே மாதத்தில் 18,733 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, அதிகம் விற்கப்பட்ட மாருதி சுஸுகி காராக இருந்தது.
இந்த வகையில் பார்த்தால், இந்த ஆண்டு மே மாதத்தில் சுமார் 5,891 பலேனோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஃப்ரான்க்ஸ் கார்களின் விற்பனை கணிசமாக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வரிசையில் 8வது மற்றும் 9வது இடங்களில் ஈக்கோ மற்றும் கிராண்ட் விட்டாரா உள்ளன. இவற்றின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 10,960 மற்றும் 9,736 ஆகும். கடைசி 10வது இடத்தில் ஆல்டோ 7,675 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் கடந்த மே மாதத்தில்தான் அப்டேட் செய்யப்பட்டது. இனி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என அப்போதே கூறியிருந்தோம். அதன்படி, ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் அதேநேரம், ஒரு சமயத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் காராக விளங்கிய பலேனோவின் விற்பனை வெகுவாக குறைய துவங்கியுள்ளது. ஆதலால், பலேனோவை அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்தை மாருதி சுஸுகி நெருங்குகிறது.


Click it and Unblock the Notifications









