மாருதி சுஸுகி நிறுவனத்துக்கே இப்படி ஒரு நிலைமையா! கப்பல் மாதிரி காரை களமிறக்கியும் வாங்கறதுக்கு ஆள் இல்ல!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக சியாஸ் செடான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மாருதி சுஸுகி சியாஸ் செடான் காரின் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 730 சியாஸ் செடான் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 992 ஆக இருந்தது. இது 26 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இது கடுமையான வீழ்ச்சி என்பதால், நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்களின் பட்டியலில் சியாஸால் 9வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை நீண்ட காலமாகவே 'டல்' அடித்து கொண்டுதான் உள்ளது.
மக்கள் செடான் ரக கார்களுக்கு பதிலாக எஸ்யூவி ரக கார்களை அதிகளவில் வாங்க தொடங்கியிருப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும். எனவே மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரின் விற்பனையை நிறுத்தவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவல்களை எல்லாம் மாருதி சுஸுகி நிறுவனம் மறுத்துள்ளது.

எனவே இந்திய சந்தையில் மாருதி சுஸுகி சியாஸ் கார் தொடர்ந்து விற்பனையில் இருக்கும். தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 9.40 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி (Honda City), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) உள்ளிட்ட செடான் கார்களுடன், மாருதி சுஸுகி சியாஸ் விற்பனையில் நேருக்கு நேராக போட்டியிட்டு வருகிறது.
மாருதி சுஸுகி சியாஸ் காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.04 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி சியாஸ் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற பெரும்பாலான கார்களில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் தனது பெரும்பாலான கார்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே உள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடல் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதும், மாருதி சுஸுகி டிசையர் காரின் புதிய தலைமுறை மாடல் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதும் இதற்கு உதாரணங்களாக உள்ளன.
ஆனால் மாருதி சுஸுகி சியாஸ் கார் மிக நீண்ட காலமாக மிகப்பெரிய அளவில் எந்தவொரு அப்டேட்டும் செய்யப்படாமல் உள்ளது. ஒருவேளை மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரை வெகுவாக அப்டேட் செய்து களமிறக்கினால், விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








