டீசல் என்ஜினினால் சின்னா பின்னமாகும் முன்னணி கார் நிறுவனம் - இவங்களுக்கு இப்படியொரு நிலைமையா?
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். மாதந்தோறும் இலட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி சமீப காலத்தில் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது மத்திய அரசு ஆகும். மத்திய அரசு ஓர் நல்ல எண்ணத்துடனே அந்த நடவடிக்கையை கையில் எடுத்தது. அரசாங்கத்தின் அந்த நடவடிக்கைக்கு ஏற்ப பல முன்னணி கார் நிறுவனங்கள் மாறிவிட்டன. ஆனால், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகியால் முழுமையாக மாற முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
மக்களுக்கு விற்பனை செய்யப்படும் கார்களில் இருந்து வெளிவரும் கார்பன் மாசு உமிழ்வை கட்டுப்படுத்தும் விதமாக பிஎஸ் (BS- Bharat Stage Emission Standards) விதிமுறைகளை மத்திய அரசாங்கம் கையாண்டு வருகிறது. பிஎஸ் விதிமுறைகள் கடந்த பல வருடங்களாக மத்திய அரசாங்கத்தால் பின்பற்றப்படும் ஒன்றுதான்.

ஆனால், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பிஎஸ்6 விதிமுறைகளுக்கு ஏற்ப மாருதி சுஸுகி நிறுவனம் கையில் எடுத்த நடவடிக்கை அந்த நிறுவனத்துக்கு இப்போது வரையில் பெரும் தலைவலியாக உள்ளது. மேலும், ரூ.1000 கோடி வரையில் மாருதி சுஸுகிக்கு முதலீடு நஷ்டமாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் விற்பனை செய்யப்படும் கார்கள் அனைத்தும் கட்டாயமாக பிஎஸ்6 விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும் என அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே மத்திய அரசு அறிவித்தது. இதனால், கார் நிறுவனங்கள் தங்களது கார் என்ஜின்களை அப்கிரேட் செய்ய ஆரம்பித்தன. இதற்காக சில கோடி ரூபாய்களை முதலீடு செய்தன. இந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனம் அதன் டீசல் என்ஜின்களை அப்கிரேட் செய்ய ரூ.1,000 கோடியை முதலீடு செய்தது.

ஆனால், இப்போதுவரையில் மாருதி சுஸுகியின் டீசல் என்ஜின் டெக்னாலஜி அப்கிரேட் செய்யப்படவில்லை. இதனால், பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்துவரும் மாருதி சுஸுகி, டீசல் கார்கள் இல்லாத குறையை சமாளிக்கும் விதமாக சிஎன்ஜி கார்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. மேலும், வாடிக்கையாளர்களை கவர புது, புது எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய துவங்கியது.
மாருதி சுஸுகியின் டீசல் கார்களின் வரலாற்றை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் இந்த நிறுவனம் பியோஜியோட் நிறுவனத்தின் டீசல் என்ஜின்களை தனது ஜென் மற்றும் எக்ஸ்டீம் கார்களில் பயன்படுத்த ஆரம்பித்தது. ஆனால், இவை கஸ்டமர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து, 2007இல் ஃபியாட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து மாருதி சுஸுகி உருவாக்கிய 1.3 லிட்டர் டிடிஐஎஸ் என்ஜின் அதன் மென்மையான இயக்கத்தால் கவனத்தை பெற்றது.

அதனை தொடர்ந்து, 2014ஆம் ஆண்டில் 2-சிலிண்டர் டீசல் என்ஜினை தனது சொந்த முயற்சியில் மாருதி சுஸுகி உருவாக்கியது. 2-சிலிண்டர் என்ஜின்களை உருவாக்குவது செலவு குறைந்ததாக இருந்தது என்றாலும், வேறு சில காரணங்களினால் 2-சிலிண்டர் டீசல் என்ஜினை உருவாக்குவதை 2017இல் மாருதி நிறுத்தியது. இதற்கு பதிலாக, 4-சிலிண்டர் டீசல் என்ஜினை உருவாக்கும் பணியில் 2019ஆம் ஆண்டு வரையில் மாருதி சுஸுகி ஈடுப்பட்டது. அந்த முயற்சியில், டீசல் என்ஜின் உருவாக்கப்பட்டாலும் அதனை நீண்ட காலத்திற்கு மாருதி சுஸுகி பயன்படுத்தவில்லை.
மற்ற கார் நிறுவனங்களை போன்று, மாருதி சுஸுகியும் எலக்ட்ரிக், சிஎன்ஜி, ஹைப்ரீட் போன்ற பெட்ரோல்/ டீசலுக்கு மாற்று எரிபொருளில் இயங்கக்கூடிய கார்களில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, குறைந்த விலையில் விற்க முடியும் என்பதினால் சிஎன்ஜி கார்களில் இந்த நிறுவனம் இன்னும் கூடுதல் கவனத்தை செலுத்துகிறது. அதேபோல், எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் கார்கள் மற்றும் செயல்திறன் குறைவான ஹைப்ரீட் கார்கள் போன்றவையும் மாருதி சுஸுகியின் எதிர்கால திட்டத்தில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரொலை காட்டிலும், டீசல் எரிபொருளின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசாங்கமும் டீசல் கார்களை சாலையில் இருந்து ஓரங்கட்டுவதில் மும்முரமாக உள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, மாருதி சுஸுகியில் இருந்து இனி டீசல் கார்கள் வராமல் கூட போகலாம். ஆனால், ரூ.1,000 கோடியை முதலீடு செய்திருப்பதினாலேயே இந்த விஷயத்தை மாருதி சுஸுகி அவ்வளவு எளிதாக கைவிடாது.


Click it and Unblock the Notifications









