நல்ல மனுசுங்க நம்ம மாருதிக்கு... இந்த மாசம் கடைசி வரைக்கும் இந்த காரை விற்பனைக்கு வழங்க போறாங்களாம்!
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் டிரீம் சீரிஸ் (Dream Series) எனும் சிறப்பு பதிப்பை அதன் மூன்று முக்கிய ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அவற்றின் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் நோக்கிலேயே இந்த பதிப்பை அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக கருதப்படும் ஆல்டோ கே10 (Alto K10), எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) மற்றும் செலிரியோ (Celerio) ஆகிய மூன்று கார் மாடல்களிலேயே டிரீமிம் சீரிஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் மாடல் குறுகிய நாட்களுக்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது இம்மாத இறுதி வரை டிரீம் சீரிஸ் பதிப்பின் விற்பனை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகையால், ஜூலை 31 ஆம் தேதி வரை இந்தியர்களால் ஆல்டோ கே10, எஸ் பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகிய கார் மாடல்களில் கிடைக்கும் டிரீம் சீரிஸ் சிறப்பு பதிப்பை வாங்கிக் கொள்ள முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த கார் மாடல்களின் வழக்கமான பதிப்பிற்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே டிரீம் சீரிஸ் சிறப்பு பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது.
சுமார் 21 ஆயிரம் முன் பதிவுகளை டிரீம் சீரிஸில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் பெற்றிருப்பதாகவே அது தெரிவித்து இருக்கின்றது. இதனால், 17 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியை மாருதி சுஸுகியின் அரேனா பிரிவுச் சந்தித்து இருக்கின்றது. இந்த நோக்கத்திற்காக மாருதி சுஸுகி டிரீம் சீரிஸ் பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
மேலும், இதற்கான பலனை அது அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதற்கு பின்னர் மீண்டும் டிரீம் சீரிஸின் விற்பனை காலம் நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ரூ. 4.99 லட்சம் என்கிற விலையிலேயே இந்த பதிப்பு விற்பனைக்குக் கிடைக்கின்றது. டிரீம் சீரிஸ் அந்தந்த கார் மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.
அந்தவகையில், ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ பிளஸ் (Alto K10 VXI+) வேரியண்டிலும், எஸ்-பிரஸ்ஸோவின் விஎக்ஸ்ஐ பிளஸ் (S-Presso VXI+) வேரியண்டிலும், செலிரியோவின் எல்எக்ஸ்ஐ (Celerio LXI) வேரியண்டிலுமே டிரீம் சீரிஸ் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த பதிப்பில் சற்றே கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
அந்தவகையில், ஆல்டோ கே10 டிரீம் சீரிஸில், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, செக்யூரிட்டி சிஸ்டம் ஆகிய அம்சங்களும், எஸ் பிரஸ்ஸோ மாடலின் டிரீம் சீரிஸ் பதிப்பில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, செக்யூரிட்டி கேமிரா மற்றும் ஒரு ஜோடி ஸ்பீக்கர் செட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, காரின் உட்பக்கத்தை அழகாக்கும் விதமாக வீல் ஆர்ச் கிளாடிங், சைடு ஸ்கிட் பிளேட், ரியர் ஸ்கிட் பிளேட், முன் பக்கத்திற்கான குரோம் கிரில், பின் பக்க கதவுக்கான குரோம் அலங்கார அணிகலன் மற்றும் நம்பர் பிளேட் ஃப்ரேம் ஆகியவையும் வழங்கப்பட்டும் இருக்கும்.
இதேபோல், செலிரியோ டிரீம் சீரிஸில் பயனியர் மல்டி மீடியா ஸ்டீரியோ, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் 1 ஜோடி ஸ்பீக்கர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். அட்வான்ஸ்டு அம்சங்களை ஆரம்ப நிலை கார்களிலும் வழங்கும் நோக்கிலேயே மாருதி சுஸுகி டிரீம் சீரிஸை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிரீம் சீரிஸ்க்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரணத்தினாலேயே இதன் விற்பனை இந்த மாத முடிவு வரைக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், அடுத்த மாதத்திற்கும் நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை. இதற்கு வாய்ப்பு இல்லை என்றே இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








