லிட்டருக்கு 22கிமீ ஓடும் இந்த மாருதி காருக்கு மட்டும் எப்போதும் டிமாண்ட் இருக்கு! டாப் கியரில் சேல்ஸ் நம்பர்ஸ்
இந்தியாவில் தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் ரக கார்களை வாங்குவது மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்துவிட்டது. நன்கு உயரமான எஸ்யூவி கார்களை வாங்கவே இன்றைய கால கஸ்டமர்கள் மிகவும் விரும்புகின்றனர். இருப்பினும், இந்திய மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு செடான் காராக மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire) விளங்குகிறது. கடந்த 2024 ஜூலை மாதத்தில் எத்தனை டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்தும், டிசைர் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமாக மாருதி சுஸுகி உள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் கார்களை அசால்ட்டாக விற்பனை செய்து வரும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு டிசைர் செடான் காரும் ஒரு காரணம் ஆகும்.

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் 5 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனையாகும் ஒரேயொரு செடான் காராக மாருதி சுஸுகி டிசைர் விளங்குகிறது. கடந்த 2024 ஜூலை மாதத்திலும் 11,647 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வழக்கத்தை காட்டிலும் இந்த எண்ணிக்கை சற்று குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், இதற்கு முந்தைய 2024 ஜூன் மாதத்தில் 13,421 டிசைர் கார்களும், மே மாதத்தில் 16,061 கார்களும், ஏப்ரல், மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஏறக்குறைய 15,800 டிசைர் கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2023ஆம் ஆண்டில் இதே ஜூலை மாதத்தில் 13,395 டிசைர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த 2024 ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட இந்தியாவின் டாப்-10 கார்கள் லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தில் மாருதி சுஸுகி டிசைர் உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரை கடந்த மே மாதத்தில் அப்டேட் செய்து அறிமுகம் செய்தது. ஸ்விஃப்ட் காரின் செடான் ரக வெர்சன் தான் டிசைர் என்பதால், டிசைர் காரும் விரைவில் அப்டேட் செய்யப்பட உள்ளது.
எங்களுக்கு தெரிந்தவரையில், மேம்படுத்தப்பட்ட புதிய டிசைர் கார் வருகிற 2024 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய டிசைர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம். தற்சமயம் டிசைர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.56 லட்சத்தில் இருந்து ரூ.9.39 லட்சம் வரையில் உள்ளன. மற்ற மாருதி கார்களை போலவே டிசைரும் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி சுஸுகி டிசைர் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகிறது. அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம் வேகத்தில் 82 பிஎச்பி மற்றும் 4200 ஆர்பிஎம் வேகத்தில் 113 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பெறலாம்.
பயணிகளின் பாதுகாப்பிற்கு இரு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மாருதி சுஸுகி டிசைர் காரின் டாப் வேரியண்ட்களில் ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக கேமரா மற்றும் சென்சார்களையும் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி டிசைர் காரை வாங்குவதற்கு என்றே ஒரு க்ரூப் உள்ளது. குறிப்பாக, கார் டாக்ஸி உள்ளிட்ட சேவைகளில் டிசைருக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக டிசைர் காரின் விற்பனை எண்ணிக்கை சில ஆயிரங்கள் குறைந்து வருகிறது. ஆதலால், மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டிசைர் செடான் காரை அறிமுகம் செய்வதற்கான சரியான நேரம் வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications









