முக்காடு போட்டுனு போனா மட்டும் விட்ருவோமா!! மாருதி எலக்ட்ரிக் கார் என சொன்னால் நம்ப முடிகிறதா?
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஆனால், இன்னும் எலக்ட்ரிக் கார்களில் தனது முழு ஈடுப்பாட்டை செலுத்த துவங்கவில்லை. முடிந்தவரையில் தாமதப்படுத்தவே முயற்சித்து வந்த நிலையில், தனது முதல் எலக்ட்ரிக் காரை சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்னும் சில வருடங்களில் டொயோட்டா எலக்ட்ரிக் காரும் விற்பனைக்கு வரும். இந்த மாருதி சுஸுகி எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களையும், தற்போதைய சோதனை ஓட்டத்தின் வீடியோவையும் பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனம் இன்னமும் முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யாவிடினும், பல்வேறு விதமான எலக்ட்ரிக் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பே மாருதி சுஸுகி வேகன்ஆர் எலக்ட்ரிக் கார் ஒன்று இதேபோன்று சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு இருந்தது.

இடையில் சிஎன்ஜி மற்றும் ஹைப்ரீட் கார்களில் மாருதி சுஸுகி கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கான வசதியை ஏற்படுத்துவதில் பெரிய தொகையை இப்போதே முதலீடு செய்ய மாருதி சுஸுகி தயாராக இல்லை. அதேநேரம், பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றான எரிபொருளில் இயங்கக்கூடிய கார்களை கொண்டுவர வேண்டும் என்பதிலும் மாருதி சுஸுகி உறுதியாக உள்ளது.
இந்த நிலையில்தான், மிகவும் அரிதாக மாருதி சுஸுகி எலக்ட்ரிக் கார் ஒன்று இந்தியாவில் சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் ஓடும் மாருதி சுஸுகி எலக்ட்ரிக் காரை காணலாம். இது மாருதி சுஸுகி இ-விட்டாரா எலக்ட்ரிக் கார் ஆகும்.

ஆம்... விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரின் எலக்ட்ரிக் வெர்சன் தான் இதுவாகும். தற்போதைய சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மூடப்பட்டு இருப்பினும், இது எலக்ட்ரிக் கார் தான் என கார் ஆர்வலர்கள் உறுதியாக கூறுகின்றனர். தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள இந்த எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்ட வீடியோவில் காரின் பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.
காரின் பின்பக்கத்தில் சுறா துடுப்பு வடிவில் ஆண்டென்னா மற்றும் ரூஃப்-இல் பொருத்தப்பட்ட ஸ்பாய்லரை மறைப்புகளையும் தாண்டி நம்மால் பார்க்க முடிகிறது. பின்பக்க விண்ட்ஷீல்டுக்கு கீழே ஒரு லைன் செல்வதை காணலாம். எங்களுக்கு தெரிந்தவரையில், இது எல்இடி டெயில்லைட்களை இணைக்கும் எல்இடி லைட் பார் ஆக இருக்கலாம். காரின் பக்கவாட்டில் கருப்பு நிறத்தில் பில்லர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அலாய் சக்கரங்களுக்கு போதுமான அளவிற்கு வீல் ஆர்ச்சுகள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகியின் புதிய ஹார்டெக்ட்-இ பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுவதாக கூறப்படும் இ-விட்டாரா கார் 49kWh மற்றும் 61kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், 2-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் என 2 ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதில், 2-வீல்-டிரைவ் ஆப்ஷனில் மோட்டாரின் ஆற்றல் காரின் முன் அல்லது பின் சக்கரங்களுக்கும், 4-வீல்-டிரைவ் ஆப்ஷனில் ஒரே நேரத்தில் 4 சக்கரங்களுக்கும் செல்லும். மேலும், இதில் 4-வீல்-டிரைவ் ஆப்ஷனில் சுஸுகியின் ஆல்கிரிப்-இ டெக்னாலஜி வழங்கப்பட உள்ளதாம். இ-விட்டாரா எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக 150 எச்பி மற்றும் 190 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி எலக்ட்ரிக் கார்கள் வணிகத்திற்குள் கொஞ்சம் மெதுவாக வருவதே நல்லதுதான். ஏனெனில், அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் எலக்ட்ரிக் கார்களுக்கு சமீப காலத்தில் மவுசு கொஞ்சம் குறைந்துள்ளது. அதாவது, மக்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்குவதில் இருந்து கொஞ்சம் ஒதுங்க ஆரம்பித்துள்ளனர். இதனால், மாருதி சுஸுகி இந்த விஷயத்திற்குள் கொஞ்சம் மெதுவாக வந்தாலும் பிரச்சனையில்லை.


Click it and Unblock the Notifications








