டாடா, மஹிந்திரா பக்கம் யாரும் போக போறது இல்ல! மாருதி சுஸுகி பார்த்து, பார்த்து உருவாக்கும் எலக்ட்ரிக் கார்!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) இந்தியா முன்னணி கார் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியதில்லை. இருப்பினும், இன்னமும் எலக்ட்ரிக் கார் விஷயத்தில் கொஞ்சம் தயக்கம் காட்டியப்படியே உள்ளது. சில மாருதி எலக்ட்ரிக் கார்கள் ஆரம்ப கட்ட வடிவமைப்பில் உள்ளன. இந்த நிலையில், மாருதி சுஸுகியின் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்று பொது வெளியில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றியும், இந்த மாருதி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
வருகிற 2025ஆம் ஆண்டில் பல்வேறு சிறப்பான கார்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றுள் சில எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன. அந்த எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று, மாருதி சுஸுகி இ விட்டாரா ஆகும். இத்தாலியில் சமீபத்தில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் இந்த மாருதி எலக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டது.

இதனால், இந்த இ விட்டாரா காரின் அறிமுகம் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், இ விட்டாரா எலக்ட்ரிக் கார் ஒன்று இந்தியாவில் பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தின் குர்கான் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தில் இ விட்டாரா கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
பகல் நேரத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் என்பதால், காரின் பின்பக்க டெயில் லைட்கள் கூட மறைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும், இத்தாலியில் வெளியீடு செய்யப்பட்ட போது எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இந்த சோதனை இ விட்டாரா காரும் இருப்பதை மறைப்புகளை தாண்டி நம்மால் பார்க்க முடிகிறது. இந்த சோதனை ஓட்ட காரில் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்களும், அவற்றில் எம்.ஆர்.எஃப் வண்டேரர் டயர்களும் இருப்பதை காண முடிகிறது.

ஆனால், சில வாரங்களுக்கு முன்பு உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட இ விட்டாரா காரில் 19-இன்ச்சில் ஏரோ-பிளேட்-ஸ்டைல் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த எலக்ட்ரிக் காரில் சார்ஜிங் பாயிண்ட் ஆனது இடது முன்பக்க சக்கரத்திற்கு மேலே வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன. கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்களை போன்று இந்த எலக்ட்ரிக் காரின் மேற்கூரையின் பின்பகுதியும் சற்று சறுகலாக உள்ளது.
இருப்பினும், மாருதி சுஸுகி இ விட்டாரா ஆனது கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார் கிடையாது. காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்கள் மறைக்கப்பட்டு இருப்பினும், அவை Y-வடிவில் உள்ளதை பார்க்க முடிகிறது. முன் கதவுகளின் கைப்பிடிகள் பறித்து இழுக்கக்கூடியவைகளாகவும், பின் கதவுகளில் கைப்பிடிகள் ஜன்னல் பகுதியிலும் வழங்கப்பட்டு உள்ளதை காண முடிகிறது.

இவை தவிர்த்து, மாருதி சுஸுகி இ விட்டாரா காரை பற்றிய மேலும் சில விபரங்களும் நமக்கு கிடைக்க பெற்றுள்ளன. அவற்றின்படி, இந்த மாருதி எலக்ட்ரிக் காரின் நீளம் 4,275மிமீ, அகலம் 1,800மிமீ, உயரம் 1,635மிமீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,700மிமீ ஆகும். தரையில் இருந்து காரின் அடிப்பகுதி ஆனது 180மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் இணைந்து இந்த எலக்ட்ரிக் காரை உருவாக்குகின்றன. இதனால், டொயோட்டாவிலும் இதேபோன்று ஒரு எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும். இந்த எலக்ட்ரிக் கார்கள் 49kWh மற்றும் 61kWh பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பேட்டரி மூலமாக ஆற்றலை பெறும் எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து அதிகப்பட்சமாக 172 பிஎச்பி மற்றும் 189 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கும் என மாருதி சுஸுகி தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி வந்தால்தான் ஆட்டம் இன்னும் சூடுப்பிடிக்கும். முதல் எலக்ட்ரிக் காராக சற்று விலைமிக்க இ விட்டாராவை அறிமுகம் செய்வது, எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் தன்னை பிரீமியம் தரத்திலான கார் நிறுவனமாக காட்டிக்கொள்ள மாருதி சுஸுகி விரும்புவதன் காரணமாக இருக்கலாம்.
Source: Rushlane


Click it and Unblock the Notifications









