7 பேர் ஜம்முனு போக கூடிய காரை இவ்ளோ கம்மியான ரேட்ல விக்கறாங்களா! 26 கிமீ மைலேஜை வேற வாரி வழங்குது!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்வதில்லை. அதற்கு பதில் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களை அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் 12 சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை எக்ஸ்எல்6, க்ராண்ட் விட்டாரா, ஃப்ரான்க்ஸ், பலேனோ, டிசையர், வேகன் ஆர், பிரெஸ்ஸா, செலிரியோ, ஈக்கோ, ஆல்டோ கே10, எஸ் பிரெஸ்ஸோ மற்றும் எர்டிகா ஆகியவை ஆகும்.
இதில் மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி கார், வாடிக்கையாளர்களை அதிகம் கவரக்கூடிய தயாரிப்புகளில் ஒன்றாக இருக்கிறது. நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் 43 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு எர்டிகா சிஎன்ஜி கார்களை டெலிவரி செய்ய வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது 43 ஆயிரம் வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி கார்களை முன்பதிவு செய்து விட்டு, டெலிவரிக்காக காத்து கொண்டுள்ளனர். மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி கார் அதிக மைலேஜ் வழங்குவதும், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ய கூடியதாக இருப்பதாலும்தான், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி காரில் பொருத்தப்பட்டிருப்பது, 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் பெட்ரோல் மூலமாக இயங்கும்போது, 102 பிஹெச்பி பவர் மற்றும் 136 என்எம் டார்க் திறனை வழங்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் வெறும் 87 பிஹெச்பி மற்றும் 121 என்எம் மட்டுமே. எனினும் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, நல்ல மைலேஜ் கிடைக்கும். எர்டிகா காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 பேர் பயணம் செய்ய கூடிய கார் ஒன்று இவ்வளவு அதிக மைலேஜ் வழங்குவது உண்மையிலேயே சிறப்பான ஒரு விஷயம்தான். மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி காரானது, மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவை VXi (O) மற்றும் ZXi (O) ஆகியவை ஆகும்.
இதில், VXi (O) வேரியண்ட்டின் விலை 10.78 லட்ச ரூபாய் ஆகவும், ZXi (O) வேரியண்ட்டின் விலை 11.88 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை இரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை இதில் இருந்து இன்னும் சற்று கூடுதலாக வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலும், அதே நேரத்தில் அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








