26 கிமீ மைலேஜ் தருது... ஒரு திருவிழா கூட்டத்தையே இந்த கார்ல ஏத்தீட்டு போகலாம்... விலை உண்மையாவே இவ்ளோதானா...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த இந்த கார், கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இது 7 சீட்டர் கார் என்பதால், அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. மேலும் சரியான விலை நிர்ணயம் மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய அம்சங்களும், மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனையை அதிகரிக்க செய்கின்றன.
தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக, மாருதி சுஸுகி எர்டிகா காரை இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு அதிகமாக நேசிக்கின்றனர்? என்பது நமக்கு தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் (ஜனவரி-ஜூன்), மிகவும் அதிகமாக விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், மாருதி சுஸுகி எர்டிகா 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்தமாக 49,732 எர்டிகா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2024ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், 88,378 ஆக உயர்ந்துள்ளது.
இது 78 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.69 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்த விலைக்கு மாருதி சுஸுகி எர்டிகா மிகவும் சிறப்பான கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பேடில் ஷிஃப்டர்கள், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் மாருதி சுஸுகி எர்டிகா காரில் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பை பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் கொடுக்கப்படுகின்றன. அதிக வசதிகளை கொண்டிருக்கும் அதே நேரத்தில், சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் மாருதி சுஸுகி எர்டிகா திகழ்கிறது.
மாருதி சுஸுகி எர்டிகா காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த காரின் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை. மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலும், சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய வகையிலும் ஒரு எம்பிவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








