சாலையில் சுற்றி திரிந்த மர்ம கார்... நம்ப முடியாத குறைவான விலையில் வரப்போற எலெக்ட்ரிக் வண்டியா இது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX). இது மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். 2025ம் ஆண்டின் தொடக்கத்தில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் விற்பனைக்கு வரவுள்ளது.
அதற்கு முன்பாக மாருதி சுஸுகி நிறுவனம் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை இந்திய சாலைகளில் சோதனை செய்யும் பணிகளை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது எடுக்கப்படும் ஸ்பை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை பற்றிய பல்வேறு தகவல்கள் நமக்கு தெரிய வருகின்றன. இதன்படி தற்போது வெளியாகியுள்ள ஒரு ஸ்பை வீடியோ மூலம், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை பற்றிய ஏராளமான புதிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், புதிய 2 ஸ்போக் மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் வழங்கப்படவுள்ளது. அத்துடன் டிரைவ் மோடுகளுக்கு ரோட்டரி டயல் கொடுக்கப்படவுள்ளது. மேலும் புதிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், உட்புறத்தில் க்ரோம் டோர் ஹேண்டில்கள் என ஏராளமான அம்சங்களையும் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் பெறவுள்ளது.
வெளிப்புற டிசைனை பொறுத்தவரையில், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன் பகுதி மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள், புத்தம் புதிய அலாய் வீல்கள், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் எல்இடி டெயில்லைட்கள் ஆகிய அம்சங்கள் எல்லாம், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் இடம்பெறவுள்ளன.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப அம்சங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் 60kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 550 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், பயணம் செய்யக்கூடிய தொலைவுதான் டிரைவிங் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது. 550 கிலோ மீட்டர்கள் என்பது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. வரும் நாட்களில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை பற்றிய இன்னும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் ஓரளவிற்கு குறைவான விலையில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரும் ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என நாங்கள் கருதுகிறோம். அனேகமாக இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயிக்கப்படும் என நாங்கள் கருதுகிறோம்.
இந்த விலையில் வந்தால், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் நிச்சயமாக மிக பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என்பது எங்கள் கருத்து. ஆனால் அதிகாரப்பூர்வமான விலையை தெரிந்து கொள்வதற்கு, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாள் வரை நாம் காத்திருக்க வேண்டும். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருடன், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் போட்டியிடும்.
இதுதவிர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) எலெக்ட்ரிக் காருக்கும், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் விற்பனையில் சவால் அளிக்கும். இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








