உண்மையாவே இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் கார் வரப்போகுதா! போட்டி நிறுவனங்களை அட்டாக் பண்ண போகும் மாருதி!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தை வேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறது. எனவே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனம் வரை பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது.
எனினும் மிகப்பெரிய அளவில் 'டிமாண்ட்' இருப்பதால், வரும் காலங்களில் ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அது மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில், 60 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் எனவும், அதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சுமார் 550 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் எனவும் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதை தொடர்ந்து எம்பிவி (MPV) ரகத்தில் மேலும் ஒரு எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அடிப்படையில்தான், இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் உருவாக்கப்படவுள்ளது.

எனவே மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள அதே பேட்டரி ஆப்ஷன்தான், இந்த எலெக்ட்ரிக் எம்பிவி காரிலும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை இரண்டுமே சற்று விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே மிகவும் குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஒரு தயாரிப்பையும் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தயார் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மாருதி சுஸுகி இடபிள்யூஎக்ஸ் (Maruti Suzuki eWX) ஆகும்.
கடந்த 2023ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023 வாகன திருவிழாவில், மாருதி சுஸுகி இடபிள்யூஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் காரின் டிசைனுக்கான காப்புரிமை இந்தியாவில் பெறப்பட்டது. எனவே இந்திய சந்தையில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் காரின் நீளம் 3,395 மிமீ ஆகவும், அகலம் 1,475 மிமீ ஆகவும், உயரம் 1,620 மிமீ ஆகவும் இருக்கலாம். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் சுமார் 250 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது அளவில் சிறிய காராக இருப்பதால், நகர பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இந்த எலெக்ட்ரிக் காரை சுலபமாக ஓட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில், எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு, கடுமையான நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இடபிள்யூஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக 7 லட்ச ரூபாய் அல்லது 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








