பைக் மாதிரி மைலேஜ் தரும் காரை வாங்க ஷோரூம்களுக்கு படையெடுக்கும் மக்கள்! விலை தெரிஞ்சா நீங்களும் கௌம்பிருவீங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (NEXA) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஃப்ரான்க்ஸ் காரின் மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 12,531 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கையை, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஏனெனில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், அந்த சமயத்தில் விற்பனையிலேயே இல்லை. அதாவது கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில்தான் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த கார், மிக குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து விட்டதை தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் உணர்த்துகிறது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 6 ஏர்பேக்குகள் என ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

இந்த சிஎன்ஜி இன்ஜின், ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை 7.51 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.04 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது சரியான விலை நிர்ணயமாக கருதப்படுகிறது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டிருப்பதற்கு இது முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிநவீன வசதிகள், சிறப்பான மைலேஜ் மற்றும் சரியான விலை நிர்ணயம் ஆகியவைதான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனான டொயோட்டா டைசர் (Toyota Taisor) சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் என்பதால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டைசர் ஆகிய 2 கார்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எனவே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் போலவே, டொயோட்டா டைசர் காரும் விற்பனையில் வெற்றி கொடி நாட்டும் என நாங்கள் கருதுகிறோம்.
டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுக்கு, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டைசர் ஆகிய 2 கார்களும், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








