அசால்டா 29 கிமீ மைலேஜ் குடுக்கற காரை இந்த ரேட்ல விக்கறாங்களா! அதான் எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்கறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கூபே க்ராஸ்ஓவர் (Coupe Crossover) கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், மிக குறுகிய காலத்திலேயே இந்திய வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக மாறியது.
இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் பதிவு செய்து வருகிறது. இது நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் தொடர்ந்துள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின், நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 13,874 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11,455 ஆக மட்டுமே இருந்தது. இது 21 சதவீத வளர்ச்சி ஆகும்.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். அதிகபட்சமாக 100 ஹெச்பி பவர் மற்றும் 147 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதில் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 21.50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்படுகிறது.
90 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்கள் 21.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.89 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாருதி சுஸுகி சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த காரின் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் உடன்தான், சிஎன்ஜி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி ஆப்ஷனில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும்.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரிலேயே அதிக மைலேஜ் வழங்குவது சிஎன்ஜி ஆப்ஷன்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வசதிகளை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் போன்றவை எல்லாம் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை 7.51 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.87 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை, நிறைய பேர் வாங்குகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) உள்ளிட்ட கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








