மைலேஜ் தருவதில் லட்டு மாதிரியான காரை கொண்டு வர போகுது மாருதி.. 30+ கிமீ மைலேஜை தருமா! வாயடச்சு நிக்க போறாங்க!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தன்னுடைய புதிய கார்களை மிக அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாற்றும் முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், டூ-வீலர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மைலேஜ் தரக் கூடியதாக மாற்றும் பணியிலேயே மாருதி சுஸுகி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே மாருதி கார்கள் அதிகம் மைலேஜ் தருவதற்கு பெயர்போனவையாக காட்சியளிக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மேலும் அதிக மைலேஜ் தர வழிவகுக்கும் தொழில்நுட்பங்களைத் தன்னுடைய கார்களில் சேர்க்கும் பணியில் களமிறங்கி உள்ளது, மாருதி சுஸுகி.
அந்த தொழில்நுட்பம் முதலில் நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் (Fronx) கார் மாடலிலேயே இடம் பெற இருப்பதாகவும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக லிட்டர் ஒன்றிற்கே 30 கி.மீட்டருக்கும் அதிகமான மைலேஜைத் தரக் கூடியதாக ஃப்ரான்க்ஸ் கார் மாடல் மாற இருக்கின்றது.

ஏற்கனவே இந்தியாவில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலாக ஃப்ரான்க்ஸ் மாறி உள்ளது. விற்பனைக்கு வந்த பத்தே மாதங்களில் அது 1 லட்சம் யூனிட் எனும் மாபெரும் விற்பனைச் சாதனையையே இந்தியாவில் படைத்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களிலேயே மற்றுமொரு இரண்டு லட்சம் யூனிட் விற்பனையை ஃப்ரான்க்ஸ் எட்டியது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் சென்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவி-லேயே முதல் முறையாக வெளியீடு செய்தது. ஜனவரியில் அறிமுகப்படுத்தி இருந்தாலும் ஏப்ரல் 2023 முதலில் இருந்தே ஃப்ரான்க்ஸ் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியது.
அப்படி பார்த்தால் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆகின்றன. இந்த குறுகிய காலக்கட்டத்திலேயே அது 2 லட்சம் யூனிட்டுகளைக் கடந்து தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலுக்கே சிறப்பு சேர்க்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது மாருதி சுஸுகி.
நிறுவனம், அதிகம் மைலேஜ் தரக் கூடிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தையே அது தயாரித்து வருகின்றது. இது ஓர் ஸ்ட்ராங் ஹைபிரிட் டெக்னாலஜி (Strong Hybrid Tech) ஆகும். இதையே விரைவில் புதுப்பித்தலுடன் விற்பனைக்கு வர இருக்கும் ஃப்ரான்க்ஸ் காரில் பயன்படுத்த மாருதி சுஸுகி திட்டமிட்டு இருக்கின்றது. இந்த தொழில்நுட்பமே ஃப்ரான்க்ஸ் காரை லிட்டர் ஒன்றிற்கே 30 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கக் கூடியதாக மாற்ற இருக்கின்றது.
மேலும், இந்த கார் 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே அதிகம் மைலேஜை விரும்பும் கார் பிரியர்களை இந்த தகவல் வெகுவாக ஈர்த்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரை இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் இருந்தே இதற்கான கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவில் இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு விதமான தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 7.52 லட்சம் தொடங்கி ரூ. 13.04 லட்சம் வரையிலான விலையில் அது விற்கப்படுகின்றது. இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவை குறைவான மாசு, அதிக மைலேஜ் உள்ளிட்டவற்றிற்கு பெயர்போனவையாகக் காட்சியளிக்கின்றன. இந்த காரணத்தினாலேயே இந்த பிரிவை மையப்படுத்தி மாருதி அதன் அதிகம் விற்பனையாகும் ஃப்ரான்க்ஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








