மைலேஜை வாரி வழங்கும் விலை குறைவான மாருதி கார் வரப்போகுது... நடுக்கத்தில் டாடா, ஹூண்டாய் நிறுவனங்கள்...
இந்திய சந்தையில் சமீப காலமாக மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. டாடா பன்ச் (Tata Punch), ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஆகிய கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். எனவே மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் இந்த செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய மைக்ரோ எஸ்யூவி ரக கார் தற்போதைய நிலையில் ஒய்43 (Y43) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் லைன்-அப்பில் பிரெஸ்ஸா (Brezza) மற்றும் ஃப்ரான்க்ஸ் (Fronx) ஆகிய கார்களுக்கு கீழாக, இந்த மைக்ரோ எஸ்யூவி கார் நிலைநிறுத்தப்படும்.

இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள இந்த கார், வரும் 2026ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி நிறுவனம் புதிதாக உருவாக்கியுள்ள இஸட் சீரிஸ், 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (New-gen Maruti Suzuki Swift) உள்ளிட்ட கார்களிலும் இந்த இன்ஜின்தான் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. செயல்திறன் மற்றும் மைலேஜ் என 2 அம்சங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடியதாக இந்த இன்ஜின் இருக்கும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி ரக காரில் இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும் இந்த காரில் நாம் எதிர்பார்க்கலாம்.
தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை 6 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை 6.13 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி ரக காரின் ஆரம்ப விலை வெறும் 5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களுக்கு இது விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.
மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனை வழங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பெட்ரோல் இன்ஜினை காட்டிலும் சிஎன்ஜி இன்ஜின் அதிகமான மைலேஜ் வழங்க கூடியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த கார் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








