அப்ப உண்மையாவே பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிய போகுதா! அப்படியே ரூட்டை மாற்றிய மாருதி சுஸுகி!
இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன. அதற்கு பதிலாக சிஎன்ஜி (CNG) மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனை உயர தொடங்கியுள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரையில், இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் சிஎன்ஜி கார்களின் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனி சாம்ராஜ்யமே நடத்தி கொண்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஒரு புள்ளி விபரம், இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. நடப்பு 2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4.14 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் வெறும் மூன்றே மாதங்களில் 4.14 லட்சம் கார்கள் விற்பனை என்பது மிகப்பெரிய விஷயம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இதை விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த 4.14 லட்சம் கார்களில் சிஎன்ஜி கார்களின் எண்ணிக்கை மட்டும் 1.38 லட்சம் என்பதுதான்!
அதாவது ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி நிறுவனம் சராசரியாக 46 ஆயிரம் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்துள்ளது. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி (Maruti Suzuki Swift CNG) வெர்ஷன் விற்பனைக்கு வரவிருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போதைய நிலையில் 12 சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. இதில், 8 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா (Arena) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவை ஆல்டோ கே10 (Alto K10), எஸ்-பிரெஸ்ஸோ (S-Presso), செலிரியோ (Celerio), ஈக்கோ (Eeco), வேகன் ஆர் (Wagon R), டிசையர் (Dzire), பிரெஸ்ஸா (Brezza) மற்றும் எர்டிகா (Ertiga) ஆகியவை ஆகும்.
எஞ்சிய 4 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவை பலேனோ (Baleno), ஃப்ரான்க்ஸ் (Fronx), எக்ஸ்எல்6 (XL6) மற்றும் க்ராண்ட் விட்டாரா (Grand Vitara) ஆகியவை ஆகும். இதில், ஸ்விஃப்ட் விடுபட்டிருப்பது ஏன்? என நீங்கள் நினைப்பது புரிகிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை (New-gen) மாடலை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷன் இருந்து வந்தது. ஆனால் புதிய தலைமுறை மாடல் பெட்ரோல் ஆப்ஷனுடன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை. ஆனால் வரும் மாதங்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் மீண்டும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் கொண்டு வரப்படவுள்ளது. இந்த மாடலின் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஎன்ஜி கார்களின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, சிஎன்ஜி கார்கள் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. தற்போது சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய பைக்குகள் எல்லாம் விற்பனைக்கு வர தொடங்கி விட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரையில், டீசல் கார்களின் விற்பனையை ஏற்கனவே நிறுத்தி விட்டது. அதற்கு பதிலாக சிஎன்ஜி கார்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதிலும் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக உள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார், இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) என்ற பெயரில், வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வரவுள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








