மஹிந்திராவிடம் மண்ணை கவ்விய மாருதி!! இப்படி ஆகும்னு எதிர்பார்க்கவே இல்ல... ஜப்பான்-ஸ்டைல் இந்தியாவில் எடுப்படல
மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) வாகனங்கள் விற்பனை இதுவரையில் இல்லாத அளவிற்கு கடந்த ஜனவரி மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதையும், இந்த மாருதி சுஸுகி ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை பற்றியும் முழுமையாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி ஜிப்ஸி வாகனத்தை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். போலீஸ் வாகனமாக நம் நினைவில் இருக்கும் ஜிப்ஸிக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் தார் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. பின், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி ஜிப்ஸி விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியது.

ஆனால், தார் வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் மஹிந்திரா தாருக்கு போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஜிம்னி வாகனத்தை ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவந்தது. பிரபலமான ஜிப்ஸியின் இடத்தில் கொண்டுவரப்பட்டதினாலேயே ஜிம்னியின் அறிமுகத்திற்கு இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியது.
இதன் விளைவாக, அறிமுகம் செய்யப்பட்ட உடன் நிறைய பேர் ஜிம்னி வாகனங்களை வாங்கினர். ஆனால், இது எல்லாம் சில மாதங்களுக்கு மட்டுமே இருந்தது. 2023 ஜனவரி மாதத்திலேயே முன்பதிவுகள் துவங்கப்பட்டாலும், ஜிம்னி டெலிவிரிகள் 2023 ஜூன் மாதத்தில்தான் துவங்கின. முதல் ஜூன் மாதத்தில் மொத்தம் 3,071 ஜிம்னி வாகனங்கள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டன.

அதே ஜூன் மாதத்தில் மஹிந்திரா தாரும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் (3,899) விற்கப்பட்டு இருந்ததால், விற்பனையில் தாருக்கும், ஜிம்னிக்கும் இடையே பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்த்தோம். இதற்கேற்றப்படி, 2023 ஜூலை மாதத்தில் இன்னும் கூடுதலாக 3,778 ஜிம்னி வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்தது. ஆனால், அந்த மாதத்தில் மஹிந்திரா தாரின் விற்பனை எண்ணிக்கை 5,265 ஆக பதிவாகியது.
அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் மஹிந்திரா தாரின் விற்பனையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், தாரின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டுதான் சென்றது. ஆனால், மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனை எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் குறைய துவங்கியது. கடந்த 2023ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் 730 ஜிம்னி வாகனங்கள் விற்கப்பட்டு இருந்த நிலையில், புதிய 2024ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் வெறும் 163 ஜிம்னி வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 6,059 மஹிந்திரா தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தனைக்கும், மஹிந்திரா தார் வெறும் 3 கதவுகளை மட்டுமே கொண்டுள்ளதால், தாருக்குள் ஏறுவதும், இறங்குவதும் சற்று சிரமமாக உள்ளது என்கிற பேச்சு எழுந்துக் கொண்டிருக்கும் சூழலில், 5 கதவுகளுடன் ஜிம்னி களமிறக்கப்பட்டது. இந்த ஒரு காரணத்தினாலேயே தாரை காட்டிலும் ஜிம்னியை நிறைய பேர் வாங்குவர் என கணிக்கப்பட்டது.
ஆனால் அந்த கணிப்பு எல்லாம் பொய்யாகி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி வரையில் மொத்தமாகவே வெறும் 16,369 மாருதி சுஸுகி ஜிம்னி வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, சராசரியாக ஒரு மாதத்திற்கு 2,046. ஆனால் அதுவே, மஹிந்திரா தார் கடந்த ஆண்டு ஜூனில் இருந்து சுமார் 43,787 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு மாதத்திற்கு 5,473 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புள்ளி விபரங்களின்படி பார்க்கும்போது, மஹிந்திராவிடம் மாருதி சுஸுகி மண்ணை கவ்வியுள்ளது தெளிவாக தெரிகிறது. ஆகையால், ஜிம்னி விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மாருதி சுஸுகி உள்ளது. இல்லையென்றால், வரும் மாதங்களில் ஒரு ஜிம்னி வாகனம் கூட விற்பனையாகாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









