மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியர்களைக் கவரும் பொருட்டு 'இது நம்பமுடியாதது. இது ஸ்ட்ராங் ஹைப்ரிட்' (It's Unbelievable. It's Strong Hybrid) எனும் புதிய பிரச்சாரத்தை நம் நாட்டில் மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றது.
நிறுவனம் அதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் (Strong Hybrid Technology) கொண்ட கார் மாடல்களான இன்விக்டோ (Invicto) மற்றும் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) போன்ற கார் மாடல்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே இந்த பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கின்றது. இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா கார் மாடலின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட கார் மாடல்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் திறன் கொண்டவை ஆகும். இவை ஓர் உள் எரிப்பு எஞ்சின் (Internal Combustion Engine) கொண்ட வாகனங்கள் ஆகும். அதேவேளையில், இதில் வழங்கப்பட்டு இருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பம் 60 சதவீதம் மின்சாரத்தில் அந்த கார்களை இயங்கச் செய்யும்.
இத்தகைய வசதிக் கொண்ட கார் மாடல்களின் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாருதி சுஸுகி 'இது நம்பமுடியாதது. இது ஸ்ட்ராங் ஹைப்ரிட்' எனும் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கின்றது. நிறுவனத்தின் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல்கள் அதிகம் மைலேஜ் தரக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன.
அவற்றில் ஒரு முறை முழுமையாக டேங்க் ஃபுல் செய்தால் சுமார் 1,200 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும் என மாருதி சுஸுகி தெரிவித்து இருக்கின்றது. இதுவே ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் கொண்ட கார் மாடல்களின் மிக சிறந்த திறன் ஆகும். இதுதவிர, இது எரிபொருளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து அதன் வாயிலாகவும் கார் இயங்கும் என்பதால் மாசு வெளிப்பாடும் குறைவாகவே இந்த கார்களில் இருக்கின்றது.
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா: இந்தியாவில் இந்த கார் மாடல் ரூ. 10.80 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கிராண்ட் விட்டாரா 18.43 லட்சம் ரூபாய் தொடங்கி 19.93 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.
ஜீட்டா பிளஸ் (Zeta+) மற்றும் ஆல்ஃபா பிளஸ் (Alpha+ ) இந்த இரண்டு தேர்வுகளில் மட்டுமே ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இரண்டு தேர்விலும் இன்டெலிஜென்ட் எலெக்ட்ரிக் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதி உடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் சிவிடி கியர்பாக்ஸ் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது ஒரு லிட்டருக்கு 27.97 கிமீ வரை மைலேஜ் தரும் என மாருதி சுஸுகி தெரிவித்து இருக்கின்றது. மேலும், 45 லிட்டர் வரை இந்த காரில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும். இவ்வாறு முழுமையாக நிரப்பும் பட்சத்திலேயே சுமார் 1200 கிமீ தூரம் இந்த கார் மைலேஜ் வழங்கும்.
நிறுவனம் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கீழ் வழங்கும் பேட்டரி பேக் இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை நீடித்து உழைக்கும் என கூறப்படுகின்றது. இதே கார் மாடலில் மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி ஆப்ஷனையும் விற்பனைக்கு வழங்குகின்றது. அது ரூ. 13.15 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.6 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மாருதி சுஸுகி இன்விக்டோ: இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடலான டொயோட்டா இன்னோவை ரீ-பேட்ஜ் செய்து இன்விக்டோ என மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 23.24 கிமீ வரையில் மைலேஜ் தரும். 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 168 செல் Ni-MH பேட்டரி பேக்கே இந்த காரில் ஹைபிரிட் சிஸ்டத்தின் கீழ் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுவே இன்விக்டோவை அதிகம் மைலேஜ் தரும் வாகனமாக மாற்றி இருக்கின்றது. 25.21 லட்சம் ரூபாய் தொடங்கி ரூ. 29.02 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்கப்படுகின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். நெக்ஸா ஷோரூம் வாயிலாக இன்விக்டோ விற்கப்பட்டு வருகின்றது. கிராண்ட் விட்டாராவும் இதே ஷோரூம் வாயிலாவே விற்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டு கார் மாடல்களும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடல்களாகும். இதனால்தான் இந்தியர்கள் மத்தியில் இந்த கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த காரின் பக்கம் வாடிக்கையளர்களை ஈர்க்கும் பொருட்டே மாருதி சுஸுகி சிறப்பு பிரச்சாரத்தைத் தற்போது தொடங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








