தரமான கார்கள் இதைவிட கம்மியான விலையில் கிடைக்காது!! மாருதி ஸ்விஃப்ட் காரின் விலையில் கிடைக்கும் நிஸான் கார்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் புத்தம் புதிய ஸ்விஃப்ட் காரை மார்க்கெட்டில் இந்த மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான கார் அறிமுகங்களுள் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஹேட்ச்பேக் ரக காரான மாருதி ஸ்விஃப்ட்டிற்கு விற்பனையில் போட்டியளிக்கக்கூடிய வகையில் ஏராளமான ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் உள்ளன. அவற்றுள் ஒன்றான நிஸான் மேக்னைட் கார் உடன் 2024 ஸ்விஃப்ட் காரை இந்த தொகுப்பில் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.
பரிமாண அளவுகள்: புதிய ஸ்விஃப்ட் காரின் நீளம் ஆனது 3860மிமீ, அகலம் 1735மிமீ, உயரம் 1520மிமீ ஆகும். காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2450மிமீ ஆகும். பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பூட் ஸ்பேஸ் பகுதி 265 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து புதிய ஸ்விஃப்ட் காரின் அடிப்பகுதி ஆனது 163மிமீ உயரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

2024 ஸ்விஃப்ட் காருடன் ஒப்பிடுகையில், நிஸான் மேக்னைட் கார் கிட்டத்தட்ட 134மிமீ நீளம் அதிகமானது. அதாவது, கிட்டத்தட்ட அரை அடி ஸ்கேல் அளவிற்கு மேக்னைட் கூடுதல் நீளமானது. அதேபோல், ஸ்விஃப்ட்டை காட்டிலும் மேக்னைட் 23மிமீ கூடுதல் அகலமானது, 52மிமீ கூடுதல் உயரமானது ஆகும். இதன் காரணமாக, மேக்னைட்டில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் அதிகமாக உள்ளது. மேக்னைட்டில் பூட் ஸ்பேஸ் அளவு 336 லிட்டர்கள் ஆகும்.
தொழிற்நுட்ப வசதிகள்: 2024 ஸ்விஃப்ட் காரில் 9-இன்ச் டச் ஸ்க்ரீன், அனலாக் டயல்களுடன் டிரைவருக்கான திரை, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, கனெக்டட் கார் தொழிற்நுட்பம், 6-ஸ்பீக்கர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள், எலக்ட்ரிக் மூலமாக ஆட்டோமேட்டிக்காக மூடி திறந்துக் கொள்ளும் ORVM-கள், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்டவற்றை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

2024 ஸ்விஃப்ட் காரில் கிடைக்கும் நிறைய அம்சங்கள் நிஸான் மேக்னைட் காரிலும் கிடைக்கும். ஆனால், ஸ்விஃப்ட்டில் நீங்கள் 6 ஏர்பேக்குகளை பெறலாம், மேக்னைட்டில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கிடைக்கும். அதேபோல், இன்ஃபோடெயின்மெண்ட் டச் ஸ்க்ரீன் மேக்னைட் காரில் 1-இன்ச் குறைவாக 8-இன்ச்சில் மட்டுமே கிடைக்கும். டிரைவருக்கான தகவல்களை வழங்க மேக்னைட்டில் 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்பிளே கொடுக்கப்படுகிறது.
பவர்டிரெயின்: வழக்கம்போல், புதிய ஸ்விஃப்ட் காரில் ஒரேயொரு என்ஜின் ஆப்ஷனை மட்டுமே மாருதி நிறுவனம் வழங்கியுள்ளது என்றாலும், அந்த ஒரேயொரு என்ஜின் ஆப்ஷன் புதியதாக மாற்றப்பட்டுள்ளது. 2024 ஸ்விஃப்ட் காரில் புத்தம் புதிய 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் இசட்12இ, 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 82 பிஎஸ் மற்றும் 112 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் (அ) 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸை பெறலாம்.

நிஸான் மேக்னைட் காரில் 1 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட் 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் 3-சிலிண்டர் பெட்ரோல் என 2 விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. ஆக, இந்த இரு ஹேட்ச்பேக் கார்களில் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற முடியாது. நிஸான் மேக்னைட்டில் 5-ஸ்பீடு மேனுவல், 5-ஸ்பீடு ஏ.எம்.டி மற்றும் சிவிடி என 3 விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
விலை: 2024 ஸ்விஃப்ட் காரை ரூ.6.94 லட்சத்தில் இருந்து ரூ.9.64 லட்சம் வரையிலான விலைகளில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை அறிமுக விலையே. அதாவது, இந்த விலைகள் விரைவில் அதிகரிக்கப்படும். நிஸான் மேக்னைட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.99 லட்சத்தில் இருந்து ரூ.11.27 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆனது இந்தியாவின் தேசிய கார் என சொல்லும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுகிறது. ஆதலால், நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வாங்குவதை போல் ஸ்விஃப்ட்டை வாங்க போகிறீர்களா அல்லது வித்தியாசமாக நிஸான் மேக்னைட்டை தேர்வு செய்ய போகிறீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டும் ஜப்பானிய ஸ்டைல் ஹேட்ச்பேக் கார்களாகும்.


Click it and Unblock the Notifications









