மைலேஜில் இந்த காரை அடிச்சுக்க ஆளே இல்ல! விலையும் இவ்ளோதானா! எப்புட்றா என மண்டய பிச்சுக்கும் பைக் நிறுவனங்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). கடந்த 1999ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி வேகன் ஆர், இன்றளவும் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), அதை உறுதி செய்கிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 16,191 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 12,970 ஆக மட்டுமே இருந்தது. இது 25 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலம், இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி வேகன் ஆர் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகிய கார்கள் உள்ளன.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்ட பின்னரும் கூட, மாருதி சுஸுகி வேகன் ஆர் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெற்று கொண்டுள்ளது என்றால், அதற்கு சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் மற்றும் வசதிகள் ஆகிய அம்சங்கள்தான் முக்கியமான காரணமாக உள்ளன.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை 5.55 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 7.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். எனவே மிடில்-க்ளாஸ் மக்களுக்கு ஏற்ற கார் என இதனை கூற முடியும்.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில், 67 பிஎஸ் பவர் மற்றும் 89 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 90 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர 1.0 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரில் வழங்கப்படுவதிலேயே சிஎன்ஜி இன்ஜின்தான் அதிக மைலேஜ் கொடுக்க கூடியதாக உள்ளது.
வேகன் ஆர் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு சில பைக்குகளை விட அதிக மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வசதிகளை பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். எனவே வாடிக்கையாளர்கள் வழங்க கூடிய பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை கூற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய, அதே நேரத்தில் பல்வேறு வசதிகளும் நிறைந்திருக்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி வேகன் ஆர் ஏற்றது என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








