கார் திருடர்களின் டார்க்கெட் இந்த மாருதி கார் தான்!! ஒவ்வொரு மாசமும் ஆயிரக்கணக்கில் இந்த கார் விற்பனையாகுது!
இந்தியாவில் அதிகளவில் திருடு போகும் காராக மாருதி சுஸுகியின் வேகன்ஆர் (WagonR) உள்ளதாக ஓர் அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன்ஆர் விளங்கும் நிலையில், அதற்கு இணையாக அதிகம் திருடப்படும் காராகவும் வேகன்ஆர் விளங்குகிறது.
இந்தியாவில் கார்கள் திருட்டு ஆனது கடந்த 2023ஆம் ஆண்டில் வழக்கத்தை காட்டிலும் 2 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் எப்போதும்போல் கார்கள் அதிகளவில் திருடப்படுகின்றன. இதுகுறித்து, இந்தியாவின் முன்னணி இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியான அக்கோ (Acko) ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி பார்க்கும்போது, 2-வீலர்களை பொறுத்தவரையில், பைக்குகள் அதிக எண்ணிக்கையில் திருடு போகின்றன. எந்த அளவிற்கு என்றால், 4-வீலர்களை காட்டிலும் மோட்டார்சைக்கிள்கள் சுமார் 9 மடங்கு அதிகமாக திருடு போகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும் டெல்லியில் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.
கார்களை பொறுத்தவரையில், மாருதி சுஸுகியின் மலிவான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிகளவில் திருடு போகும் 4-வீலராக விளங்குகிறது. இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்களுள் ஒன்றாக விளங்கும் அதேநேரம், அதிகளவில் திருடு போகும் காராகவும் வேகன்ஆர் விளங்குவது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

வேகன்ஆர் உள்பட மாருதி சுஸுகியின் கார்கள் அதிகளவில் குறிவைத்து திருடப்படுவதாக அக்கோ வெளியிட்டுள்ள விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டில் திருடுப்போன கார்களில் சுமார் 47% (கிட்டத்தட்ட 2இல் ஒரு கார்) மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாக உள்ளது. கார் திருடர்கள் மிகவும் திருட விரும்பும் கார்களாக மாருதி சுஸுகியின் வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் விளங்குகின்றன.
இதற்கடுத்து, ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மற்றும் கிராண்ட் ஐ10 கார்களும் அதிக எண்ணிக்கையில் கடந்த ஆண்டில் திருடப்பட்டு உள்ளன. அதேபோல், மாருதி சுஸுகியின் டிசைர் செடான் காரும் அதிகளவில் கார் திருடர்களால் திருடப்படுகின்றன. ஏற்கனவே கூறியதுபோல், ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிக கார் திருட்டுகள் நடைபெறும் நகரமாக முதலிடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.

டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருடுப் போவதாக அக்கோ ஆராய்ச்சி செய்து கண்டுப்பிடித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் திருடுப் போன ஒட்டுமொத்த கார்களில் 37% டெல்லியில் திருடுப் போனவை ஆகும். டெல்லியில், பஜன்புரா மற்றும் உத்தரம் நகரில் அதிகளவில் கார் திருட்டு நடக்கின்றன. அதேபோல், டெல்லியின் சஹ்தாரா, பட்பார்கஞ்ச் மற்றும் படார்புர் நகரங்களிலும் அதிக கார் திருட்டுகள் நடக்கின்றன.
பைக்குகளை பொறுத்தவரையில், இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலரான ஹீரோ ஸ்பிளெண்டர் அதிக எண்ணிக்கையில் திருடு போகிறது. அதேபோல், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கும் அதிகம் திருடப்படுகின்றன. இந்த 2-வீலர்களின் மறுவிற்பனை மதிப்பு அதிகமாக இருப்பதுடன், இவற்றிற்கான உதிரி பாகங்கள் அதிகளவில் கிடைப்பதும் இவை திருடப்படுவதற்கு காரணமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியா ஆனது உலகளவில் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தையாகும். இதனாலேயே, இங்கு எந்த அளவிற்கு அதிகமாக வாகனங்கள் விற்பனையாகுகிறதோ அதே அளவிற்கு திருடர்களால் திருடப்படுகிறது. இவ்வாறான வாகன திருட்டு சம்பவங்களை குறைக்க வேண்டுமெனில், ப்ளூடூத் போன்ற கனெக்ட்டிவிட்டி வசதிகளை அதிகளவில் வாகனங்களில் கொண்டுவர வேண்டும்.


Click it and Unblock the Notifications









