மைலேஜ், விலை, பாதுகாப்பு வசதி.. புதிய மாருதி ஸ்விஃப்ட் பற்றி அறிய வேண்டிய டாப் 5 முக்கிய தகவல்கள் இதோ!
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் (Swift) காரை இந்தியாவில் நேற்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பழைய தலைமுறையிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக இந்த காரின் வெளிப்புறத் தோற்றத்தில் சில மாற்றங்களை மாருதி சுஸுகி செய்திருக்கின்றது. இதேபோல், காரின் உட்பக்கத்திலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை மாருதி சுஸுகி செய்துள்ளது.
இதுதவிர, அதிகம் மைலேஜ் தரும் எஞ்சினையும் இந்த காரில் மாருதி சுஸுகி சேர்த்திருக்கின்றது. இதுபோன்று இன்னும் ஏராளமான சிறப்பு வேலைகளை செய்தே அந்த காரை மாருதி சுஸுகி நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுபோன்று புதிய மாருதி சுஸுகி பற்றி அறிய வேண்டிய டாப் ஆறு முக்கிய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதிய ஸ்விஃப்ட் காரில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்கள் என்ன? ஸ்போர்ட்டியான லுக்கிற்கு பெயர்போனதே ஸ்விஃப்ட். இந்த லுக் மேலும் ஒரு மடங்கு புதிய ஸ்விஃப்ட் காரில் அதிகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. பிளைனான தோற்றமாக இல்லாமல் கேரக்டர் லைன் காரை சுற்றிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, புதிய எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், பூமராங் வடிவிலான பகல்நேர எல்இடி லைட், குளாஸ்ஸி கருப்பு நிறம் கொண்ட புதிய கிரில், எல்இடி பனி மின் விளக்கு, எல்இடி டெயில் லைட் மற்றும் 15 அங்குல இரண்டு நிற டோன் அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

நிற தேர்வு: புதிதாக இரண்டு புதிய நிற தேர்வுகள் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. லஸ்டர் ப்ளூ (Luster Blue) மற்றும் நோவல் ஆரஞ்சு (Novel Orange) ஆகியவையே அவை ஆகும். இத்துடன், சிஸ்லிங் ரெட் (Sizzling Red), பியர்ல் ஆர்க்டிக் ஒயிட் (Pearl Arctic White), மேக்மா கிரே (Magma Grey), ஸ்பிலெண்டிட் சில்வர் (Splendid Silver) ஆகிய நிற தேர்வுகளும் புதிய ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படுகின்றன.
மேலும், மூன்று விதமான இரட்டை நிற தேர்வுகளிலும் இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும். லஸ்டர் ப்ளூ - மிட்நைட் பிளாக் ரூஃப் (Luster Blue with Midnight Black Roof), சிஸ்லிங் ரெட்-மிட்நைட் பிளாக் ரூஃப் (Sizzling Red with Midnight Black Roof) மற்றும் பியர்ல் ஆர்க்டிக் ஒயிட்-மிட்நைட் பிளாக் ரூஃப் (Pearl Arctic White with Midnight Black Roof) ஆகியவையே அவை ஆகும்.

புதிய ஸ்விஃப்ட் காரில் உட்பக்கத்தில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் பெற்றிருக்கின்றன? புதிய டேஷ்போர்டு ஃப்ரெஷ் லுக்கை வழங்கும் வகையில் புதிய ஸ்விஃப்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிதக்கின்ற அமைப்பில் வழங்கப்பட்டு இருக்கும் திரை இதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. இத்துடன், பியானோ பிளாக் நிறம் கொண்ட டேஷ்போர்டில் சேடின் மேட் சில்வர் நிறத்தாலான இன்செர்ட்டுகள் சொருகப்பட்டு அதற்கு இன்னும் கூடுதல் அழகு சேர்க்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, 9 அங்குல ஸ்மார்ப்ளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதியுடனும், ஒயர்லெஸ் சார்ஜர், சுஸுகி கன்னெக்ட், வேகமாக செல்போனை சார்ஜ் செய்யும் வசதிக் கொண்ட ஏ மற்றும் சி ரக யுஎஸ்பி சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, பின்னிருக்கைக்கு என தனி ஏசி என ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்: புதிய ஸ்விஃப்ட் காரில் அதிக பாதுகாப்பை தரும் அம்சங்களை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் மற்றும் மும்முனை சீட் பெல்ட் ரிமைண்ட் செய்யும் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிராவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
விலை விபரம்: புதிய ஸ்விஃப்ட் ரூ. 6.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், இதன் அதிகபட்ச விலையே ரூ. 9.64 லட்சமாக மாட்டுமே இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக 11 விதமான வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மைலேஜ் மற்றும் எஞ்சின் விபரம்: புதிய ஸ்விஃப்ட் காரில் புதிய இசட் சீரிஸ் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவே அதிக மைலேஜை வழங்கும் காராக புதிய ஸ்விஃப்ட்டை மாற்றி இருக்கின்றது. 1.2 லிட்டர் இசட்12இ மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60 kW பவரை, அதாவது, 81.58பிஎஸ் பவரையும், 111.7என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், லிட்டர் ஒன்றிற்கு 25.75கிமீ வரையில் அது மைலேஜையும் வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு கிடைக்கும் வரவேற்பு லேசாக குறைந்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே அதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் மாருதி நிறுவனம் புதிய தலைமுறை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காரை சந்தா திட்டத்தின்கீழும் விற்பனைக்கு வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









