மாருதி காரை வாங்க விரும்பாதவங்களும் இந்த காரை பார்த்தா வாங்குவாங்க.. இந்த விலைக்கே ஸ்பெஷல் எடிசனா!
அடுத்தடுத்த பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாகன உற்பத்தியாளர்கள் புதுமுக வாகனங்களையும், சிறப்பு பதிப்பு வாகனங்களையும் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, சில விலை குறைவான வேரியண்டுகளையும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) ஓர் ஸ்பெஷல் எடிசன் கார் மாடலை இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதுவும், அந்த சிறப்பு பதிப்பு கார் மாடலை கம்மியான விலையில் அது விற்பனைக்குக் கொண்டு வந்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கின்றது.
மாருதி சுஸுகி நிறுவனம் வேகன்ஆர் (WagonR) கார் மாடலின் சிறப்பு பதிப்பையே விற்பனைக்குக் கொண்டு வந்து உள்ளது. அந்த பதிப்பு வேகன்ஆர் வால்ட்ஸ் (WagonR Waltz) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். குறிப்பாக, குறைவான நாட்களுக்கு மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கும்.

விழாக்காலத்தை முன்னிட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதாலேயே இதை லிமிடெட் எடிசன் (Limited Edition)ஆக அது களமிறக்கி இருக்கின்றது. மேலும், ஏற்கனவே கூறியதைப் போலவே ரூ. 5.65 லட்சம் என்கிற குறைவான விலையையே அது நிர்ணயித்து உள்ளது. வழக்கமான வேகன்ஆர் கார் மாடலைக் காட்டிலும் சற்று கவர்ச்சியான லுக்கைக் கொண்டதாக இந்த வேகன்ஆர் வால்ட்ஸ் காட்சியளிக்கின்றது.
இதுதவிர, சில பிரத்யேக சிறப்பம்சங்களையும் இந்த சிறப்பு பதிப்பில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மாருதி சுஸுகி சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், மியூசிக் சிஸ்டம் வசதிக் கொண்ட 6.2 அங்குல தொடுதிரை சிஸ்டம், பிரத்யேக டிசைனைக் கொண்ட இருக்கை கவர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா போன்ற அம்சங்களெல்லாம் இந்த சிறப்பு பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமில்லைங்க, காரின் வெளிப்புற தோற்றத்தை கவர்ச்சியானதாகக் காண்பிக்கும் பொருட்டு முன் பக்கத்தில் குரோம் பூச்சுக் கொண்ட கிரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, பனி மின் விளக்கும், அதை சுற்றியும் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலனும் பொருத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், வீல் ஆர்ச் கிளாடிங், பம்பர் புரடெக்டர், சைடு ஸ்கர்ட்டுகள் மற்றும் பாடி மோல்டிங்குகள் உள்ளிட்டவையும் இந்த சிறப்பு பதிப்பை அலங்கரிக்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றுடன் பாதுகாப்பு அம்சங்களையும் சற்று கூடுதலாக இந்த சிறப்பு பதிப்பு காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், இரட்டை ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் ஆகிய அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளன.
மாருதி சுஸுகி நிறுவனம் இந்த வால்ட்ஸ் லிமிடெட் எடிசனை ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. அந்தவகையில், எல்எக்ஸ்ஐ (LXi), விஇசட்எக்ஸ்ஐ (VXi) மற்றும் இசட்எக்ஸ்ஐ (ZXi) ஆகியவையே அவை ஆகும். இதன்படி இந்த கார் இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
67 எச்பி மற்றும் 89 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 90 எச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 1.2 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சின் ஆகிய தேர்வுகளே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இதுதவிர, வேகன்ஆர் கார் மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி-யின் ஆதிக்கம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துக் காணப்படுகின்றது. இதை வரும் பண்டிகைக் காலத்திலும் தொடர்ச்சியாக்கும் பொருட்டே அந்நிறுவனம் தற்போது சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுதவிர, அடுத்து வரும் நாட்களில் அது சிறப்பு சலுகைகளையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








