30 கி.மீ மைலேஜ் தரும் மாருதியின் எக்ஸ்எல்6 கார்! விலையும் கம்மியாக போகுது!
மாருதி சுஸூகி நிறுவனம் தனக்கென சொந்தமாக தயாரிக்கும் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தனது எக்ஸ்எல் 6 காரில் பொருத்தி அந்த காரை 30 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் மாற்றி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த கார் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காரை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியிடம் பெட்ரோல் கார்கள் மட்டுமல்லாமல் சிஎன்ஜி கார்களும் அதிகம் உள்ளன. இதுபோக இரண்டு ஸ்டிராங் ஹைபிரிட் மாடல் கார்களும் உள்ளன. இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இவிஎக்ஸ் என்ற காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் மாருதி நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தப் போகும் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காரில் 1.2 லிட்டர் இசட் சீரியஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த பெட்ரோல் இன்ஜின் உடன் கூடுதலாக ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இன்ஜின் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மாருதி நிறுவனம் சொந்தமாக ஹச்இவி என்ற சிஸ்டத்தை தயாரித்து வருகிறது. இது ஒரு ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகும். ஏற்கனவே டொயோட்டா நிறுவனத்தில் இருந்து தற்போது அந்நிறுவனம் வாங்கி வரும் ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழில்நுட்பம் அதிக விலையில் இருப்பதால் இந்த விலையை குறைப்பதற்காக சொந்தமாக ஹைபிரிட் தொழில்நுட்பத்தை உருவாக்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2025-ம் ஆண்டு வெளியாக உள்ள 7 சீட்டர் கொண்ட கிராண்டு விட்டாரா கார் தான் டொயோட்டா நிறுவனத்தின் ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்தை கொண்ட கடைசி காராக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் சொந்தமாக ஸ்ட்ராங்க் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தயாரித்து விட்டால் அந்த தொழில்நுட்பத்தை தான் தனது கார்களில் புகுத்தி விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரிலும் மாருதி நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் தொழில்நுட்பம் தான் உட்பகுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக மாருதி நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி கார்களான டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக புதிய காரை களம் இறக்க முடிவு செய்துள்ளது.

இதே போல காம்பேக்ட் எம்பிவி செக்மெண்டிலும் ரெனால்ட் கைகர் காருக்கு போட்டியாகவும் புது காரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதுபோக குறைந்த விலை கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதே போல மாருதி நிறுவனம் தனது எக்ஸ்எல் 6 காரிலும் புதிய மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இதன்படி மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல் சிக்ஸ் கார் எர்டிகா காரின் 6 சீட்டர் வெர்ஷன் காராக இருக்கிறது. எர்டிகா காரில் மிடில் ரோவை மட்டும் கேப்டன் சீட் அரேஞ்மெண்ட் இருந்தால் அது எக்ஸ்எல் 6 கார் தான். இந்த காரிலும் மாருதி நிறுவனம் உருவாக்கும் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை உட்பகுத்தி விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மாருதி நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் என்பது ரேஞ்சை அதிகரிக்கும் வகையிலான வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக மைலேஜ் கிடைக்கும் வகையில் இந்த வாகனம் டிசைன் செய்யப்படும்.இதற்காக வாகனத்துக்குள்ளேயே பெட்ரோல் ஜெனரேட்டர் ஒன்றை வைத்துள்ளனர்.
அதன் மூலம் கரண்டை உருவாக்கி அதில் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்து எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் அதிக மைலேஜ் தரும் வாகனமாக இதை உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதே போன்ற ஒரு தொழில்நுட்பத்தை இ-பவர் டெக்னாலஜி என்ற பெயரில் நிஸான் நிறுவனம் உருவாக்கி இருந்தது.
இப்படியாக மாருதி நிறுவனத்தின் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய எக்ஸ்எல் 6 கார் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக மாருதி நிறுவனம் புதிதாக கொண்டுவரமுள்ள காம்பேக்ட் எம்பிவி காரிலும் இந்த தொழில்நுட்பம் இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கார்கள் எல்லாம் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரித்து வரும் நிலையில் தற்போது மாருதி நிறுவனம் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தானே உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. இந்த இன்ஜின் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டால் நிச்சயம் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும்.


Click it and Unblock the Notifications









