1.31 கோடி ரூபாக்கு மசராட்டி சொகுசு காரா!.. எல்லா விஷயத்துலையும் வாயை பிளக்க வைக்க கூடிய காருங்க இது!
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மசராட்டி (Maserati), இந்தியர்களைக் கவரும் பொருட்டு ஓர் சூப்பரான லக்சூரி கார் மாடல் ஒன்றை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. உலக புகழ்பெற்ற கிரிகேல் (Grecale) எனும் கார் மாடலையே அது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 1.31 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த விலையில் மசராட்டி காரா என பலரை அந்நிறுவனம் வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது. சொகுசுக்கும், அதிக திறன் வெளிப்பாட்டிற்கும் பெயர்போனதே மசராட்டி சொகுசு கார்கள் ஆகும். இதற்கு சான்றாகவே நிறுவனம் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் கிரிகேல் எஸ்யூவி சொகுசு கார் மாடலும் உள்ளது.

இது மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மூன்றுமே வெவ்வேறு விதமான எஞ்சின்களைக் கொண்டவை ஆகும். கிரிகேல் ஜிடி (Grecale GT), கிரிகேல் மாடெனா (Grecale Modena) மற்றும் கிரிகேல் ட்ரோஃபியோ (Grecale Trofeo) ஆகியவையே அவை ஆகும். இதில் ஆரம்ப நிலை தேர்வாக கிரிகேல் ஜிடி வேரியண்ட் இருக்கின்றது.
இந்த தேர்வில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடனான மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது வெறும் 5.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு அடுத்தபடியாக அதிக திறனை வெளியேற்றக் கூடிய தேர்வாக மாடெனா உள்ளது. இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் 325 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல்மிக்கது என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த வேரியண்ட் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.3 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.
இந்த இரண்டு வேரியண்டுகளைக் காட்டிலும் மிக மிக அதீத திறனை வெளியேற்றக் கூடியதாக ட்ரோஃபியோ உள்ளது. இதில், 3.0 லிட்டர் வி6 டர்போ எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 528 பிஎச்பி மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
மேலும், வெறும் 3.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தை இது எட்டிவிடும். இத்தகைய தரமான காரையே மசராட்டி தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இது அதிக திறனை வெளியற்றும் கார் மாடல் மட்டுமில்லைங்க மிக அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய கார் மாடலும்கூட.
அந்தவகையில், 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 8.8 அங்குல சென்ட்ரல் கன்சோல் தொடுதிரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று தொழில்நுட்ப வசதிகளில் மட்டுமல்ல சொகுசு வசதிகளிலும் இந்த கார் நம்மை பிரம்மில் ஆழ்த்தும் வகையிலேயே உள்ளது.
குறிப்பாக இதன் உயர் நிலை தேர்வான ட்ரோஃபியோவிலே மசராட்டி ஏகப்பட்ட அம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது. உதாரணமாக கிரிகேல்-இன் ஜிடி வேரியண்டில் டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்ற சூழலில், மாடெனா மற்றும் ட்ரோஃபியோ-வில் மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், மசராட்டி நிறுவனம் இந்த கிரிகேல் எஸ்யூவி காரில் லெவல் 1 வகை அடாஸ் அம்சத்தையும் வழங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக சில தானியங்கி வசதிகளை அதன் பயன்பாட்டாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இந்த காரின் கவனிக்கத்தக்க அம்சங்களில் ஒன்றாக மசெராட்டி நுண்ணறிவு உதவியாளர் (MIA) வசதிக் கொண்ட மல்டி மீடியா திரை உள்ளது.
கூடுதலாக, டிஜிட்டல் கடிகாரம் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றை நிறுவனம் விருப்ப தேர்வாக வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து சோனஸ் ஃபேபர் சவுண்டு சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது காரை போலவே துடிப்பான இசை அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டது.
இத்தகைய தரமான சொகுசு காரையே ரூ. 1.31 கோடி எனும் ஆரம்ப விலையில் மசராட்டி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த கார் மாடலின் அறிமுகத்துடன் சேர்த்து சில புதிய விற்பனையாளர்களையும் மசராட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. புது டெல்லி மற்றும் பெங்களூருவிலேயே அது டீல்ரஷிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
ரூ. 1.31 கோடி என்பது ஆரம்ப நிலை தேர்வான கிரிகேல் ஜிடி வேரியண்டின் விலையாகும். கிரிகேல் மாடெனாவிற்கு ரூ. 1.53 கோடியும், கிரிகேல் ட்ரோஃபியோ-விற்கு ரூ. 2.05 கோடியும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே எனப்து குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மசராட்டி நிறுவனம் இந்தியாவில் கிரிகேலின் முழு மின்சார பதிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மசராட்டியின் வரலாற்றிலேயே 400V தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுமையாக மின்சார மயமாக்கப்பட்ட முதல் எஸ்யூவி ரக கார் மாடல் இதுவே ஆகும். இதையே அடுத்ததாக மசராட்டி விற்பனைக்குக் கொண்டு வரும் என நம்பப்படுகின்றது. ஆனால், அது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
மேலும், கிரிகேலின் இந்திய அறிமுகம் மசராட்டின் ஒரு முக்கியமான படியாகும். நிறுவனம் அதன் இருப்பை இந்த அறிமுகத்தின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. இந்த கார் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் வாகனம் ஆகும். ஆகையால், அதீத திறனை விரும்பும் இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








