சாலையில் மிதக்கும் சொகுசு கப்பல்... பென்ஸ் உருவாக்கியதில் வேற லெவல் மாடர்ன் கார்!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து புதிய மாடர்ன் காராக இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் (E-Class LWB) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.78.5 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பென்ஸ் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. இதனை தொடர்ந்து, விரைவில் டெலிவிரிகள் துவங்கப்பட உள்ள இந்த பென்ஸ் காருக்கு விற்பனையில் பிஎம்டபிள்யூவின் 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் போட்டியாக உள்ளது. இந்த தொகுப்பில், புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் முக்கியமான சிறப்பம்சங்களை பற்றி பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
வேரியண்ட்கள் & விலைகள்: புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ200, இ220டி மற்றும் இ450 4மேட்டிக் என்பன அந்த 3 வேரியண்ட்கள் ஆகும். இதில் இ200 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.78.5 லட்சமாகவும், மற்ற இரு வேரியண்ட்களின் விலைகள் ரூ.81.5 லட்சம் மற்றும் ரூ.92.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டெலிவிரிகள்: புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் இ200 வேரியண்ட்டை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் துவங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, இ220டி வேரியண்ட்டின் டெலிவிரிகள் தீபாவளி சமயத்திலும், இ450 4மேட்டிக் வேரியண்ட்டின் டெலிவிரிகள் அடுத்த நவம்பர் மாதத்தில் இருந்தும் திட்டமிடப்பட்டுள்ளன.
தொழிற்நுட்ப வசதிகள்: மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரில் வழங்கப்படுவதை போன்று, புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் உள்ளேயும் பெரிய அளவில் சூப்பர் ஸ்க்ரீன் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இந்த செட்-அப்பில் 14.4-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3-இன்ச்சில் டிரைவருக்கான விபரங்களை வழங்கக்கூடிய திரை மற்றும் முன் இருக்கை பயணிக்கான திரை என மொத்தம் 3 திரைகள் அடங்குகின்றன.

இந்த திரைகள் மட்டுமின்றி, 64 வண்ண நிறங்களில் கேபின் விளக்குகள், 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர், மல்டிபிள் டைப்-சி சார்ஜிங் பாயிண்ட்ஸ், ஆட்டோ-டிம்மிங் IRVM, டேஸ்போர்டில் பொருத்தப்பட்ட கேபின் கேமரா, பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி, 17-ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் மியுசிக் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, பவர்டு முன் & பின் இருக்கைகள், 8 ஏர்பேக்குகள் மற்றும் ADAS உள்ளிட்டவையும் புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.
வெளிப்பக்க தோற்றம்: தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது 6ஆம் தலைமுறை இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் ஆகும். முன்பு விற்பனையில் இருந்த 5ஆம் தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய 6ஆம் தலைமுறை மாடல் 13மிமீ கூடுதல் உயரமானது, 14மிமீ நீளமானது மற்றும் 15மிமீ அதிக நீளத்தில் வீல்பேஸை கொண்டுள்ளது. காரின் முன்பக்கத்தில் பெரிய அளவில் க்ரில் பகுதி க்ரோம்கள் உடன் வழங்கப்பட்டுள்ளது.

கிரில்லின் அளவுக்கேற்ப மெர்சிடிஸின் 3டி லோகோவும் பெரியதாக்கப்பட்டு உள்ளது. மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் காரில் வழங்கப்படுவதை போன்று இந்த காரிலும் பறித்து இழுக்கக்கூடிய டோர் ஹேண்டில்கள், 18-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இ450 4மேட்டிக் வேரியண்ட்டில் மட்டும் வித்தியாசமான பேட்டர்னில் அலாய் சக்கரங்கள் கிடைக்கும். பின்பக்கத்தில் புதிய டிசைனில் எல்இடி டெயில்லேம்ப் கொடுக்கப்பட்டுள்ளது.
என்ஜின்: மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த 3 என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, மெர்சிடிஸ்-பென்ஸில் இருந்து நீளமான சொகுசு கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காருக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவில் அதிக கஸ்டமர்கள் கிடைத்து வருகின்றனர். புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் விலைகளும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த காரை வாங்க பணக்காரர்கள் இப்போதே தயாராக ஆரம்பித்து இருப்பர்.


Click it and Unblock the Notifications









