66 லட்ச ரூபாக்கு சொகுசு கப்பலை வாங்க முடியுமா தெரியல.. ஆனா பென்ஸோட இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிடலாம்!..
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இக்யூஏ (EQA), இந்த எலெக்ட்ரிக் கார் மாடலையே மெர்சிடிஸ் பென்ஸ் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் இதற்கு ரூ. 66 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
பென்ஸ் நிறுவனம் அதன் ஐசிஇ கார் மாடலான ஜிஎல்ஏ-வை தழுவியே இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்யூஏ-வின் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இக்யூஏ 250 பிளஸ் (EQA 250+) எனும் வேரியண்டே நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் சிறப்பம்சங்களால் நிரப்பட்ட தேர்வாகும். பென்ஸ் நிறுவனம் இதனை மிகுந்த கவர்ச்சியான எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், காரின் முகப் பகுதிக்கு அழகு சேர்க்கும் விதமாக எல்இடி லைட் பார் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், பின் பக்கத்திலும் ஓர் லைட் பார் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, மூக்கொம்பு கொண்ட ஸ்டார்களால் அலங்கரிக்கப்பட்ட புதிய கிரில், 19 அங்குல அலாய் வீல், கவர்ச்சியான பம்பர் மற்றும் காற்றை உள்-வாங்குவதற்கான அழகிய பெரும் துளைகள் ஆகியவையும் இந்த காரில் உள்ளன. ஒற்றை மோட்டாரைக் கொண்டதே 250 பிளஸ் வேரியண்ட் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
இந்த மோட்டார்கள் முன் பக்கத்திலேயே நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த ஒற்றை மோட்டாரே தனித்துவமாக 188 பிஎச்பி மற்றும் 385 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிமீ என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, வெறும் 8.6 செகண்டுகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.
திறனை வெளிப்படுத்துவதில் மட்டுமல்ல ரேஞ்ஜை வழங்குவதிலும் இந்த கார் தலைசிறந்த சொகுசு கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 560 கிமீ ரேஞ்ஜை வழங்கும் வசதிக் கொண்ட 70.5 kWh பேட்டரி பேக்கே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதனை 100kW ஃபாஸ்ட் டிசி சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதை பயன்படுத்தும்போது வெறும் 35 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜை ஏற்ற வெறும் 15 நிமிடங்களே போதுமானது. இதுமட்டுமில்லைங்க 11 kW வீட்டு சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
இதைப் பயன்படுத்தும் பட்சத்தில் 7 மணி நேரம் 15 நிமிடங்கள் முழுமையாக சார்ஜாக இந்த கார் எடுத்துக் கொள்ளும். பிரீமியம் மற்றும் சொகுசான ரைடு அனுபவத்தை பெறும் நோக்கிலும் பல்வேறு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், இரண்டு திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று என்டர்டெயின்மென்ட் கருவியாகவும் செயல்படும். இந்த இரண்டு திரைகளுமே 10.25 அங்குலம் கொண்டவை ஆகும். இத்துடன், 710 வாட் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 12 ஸ்பீக்கர்கள் செட்-அப் உடன் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், காரின் உட்பக்க அழகை கூடுதல் கவர்ச்சியாக்கும் பொருட்டு ரோஸ் கோல்டு நிறத்தை இருக்கை மற்றும் ஏசி துளைகள் உள்ளிட்ட பகுதிகளில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
இத்துடன், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹெட் அப் திரை, கெஸ்சர் கன்ட்ரோல், மின்சாரத்தின் வாயிலாகக் கட்டுப்படுத்தும் வசதிக் கொண்ட டெயில்கேட், பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆம்பியன்ட் லைட் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்களால் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் கார் சொகுசு கப்பல்களுக்கு இணையானதாக மாறி இருக்கின்றது. ஆகையால், இந்திய பணக்காரர்கள் மத்தியில் இந்த ஆடம்பர எலெக்ட்ரிக் காருக்கு மிக அமோகமான வரவேற்பு கிடைக்கும் என நம்பப்படுகின்றது. அதிலும் பாதுகாப்பான பயணத்தை விரும்புவோரை இந்த கார் கூடுதலாக கவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கேற்ப பயணிகளின் உச்சப்பட்ச பாதுகாப்பை வழங்கும் விதமாக 7 ஏர் பேக்குகள், அடாஸ் அம்சம் மற்றும் பல அம்சங்களை பென்ஸ் நிறுவனம் புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் இக்யூஏ சொகுசு எலெக்ட்ரிக் காரில் வழங்கி இருக்கின்றது. இந்த காரை ஏழு விதமான வண்ண தேர்வுகளில் நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.
போலார் ஒயிட் ஹை-டெக் சில்வர் (Polar White Hi-tech Silver), காஸ்மோஸ் பிளாக் (Cosmos Black), மெயின்டெயின் கிரே (Mountain Grey), ஸ்பெக்ட்ரல் ப்ளூ (Spectral Blue), படகோனியா ரெட் (Patagonia Red) மற்றும் மவுன்டெயின் கிரே மேங்கோ (Mountain Grey Magno) ஆகியவையே அவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமோகமான வரவேற்பின் காரணத்தினாலேயே பென்ஸ் நிறுவனம் அதன் விலை குறைவான தேர்வான இக்யூஏ 250 பிளஸ்-ஐ இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல விற்பனை வரவேற்புக் கிடைக்கும் என நம்ப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








