மார்க்கெட்டை புரட்டி போட போகும் புதிய எலக்ட்ரிக் பென்ஸ் கார்! மொத்த நாடும் இதுக்கு தான் வெயிட்டிங்!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் குறைந்த விலையில், அதேநேரம் சொகுசு வசதிகளை கொண்ட இ.க்யூ.ஏ (EQA) என்கிற எலக்ட்ரிக் காரை இந்தியாவில் ஜூலை 8ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் ஆகும். இந்தியாவில் விலை குறைவான பென்ஸ் கார்களுள் ஒன்றாக ஜிஎல்ஏ விளங்குகிறது. இதனால், இக்யூஏ எலக்ட்ரிக் காரின் விலையும் குறைவாக நிர்ணயிக்கப்படும். ஆகையால், இந்திய மக்கள் பலரால் வாங்கப்படும் காராக மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த புதிய எலக்ட்ரிக் பென்ஸ் காரின் அறிமுகத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே இக்யூஏ எலக்ட்ரிக் கார் விற்பனையில் உள்ளது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூபி எலக்ட்ரிக் காரை காட்டிலும் விலை குறைவானதாக களமிறக்கப்படவுள்ள புதிய இக்யூஏ எலக்ட்ரிக் காருக்கு நம் நாட்டில் விற்பனையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ.எக்ஸ்1 மற்றும் வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் கார்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

அளவுகள்: நீளத்தில் பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 அதிக நீளமானதாக விளங்குகிறது. ஏனெனில், இந்த 3 எலக்ட்ரிக் கார்களில் ஐஎக்ஸ்1 மட்டுமே நீளத்தில் 4500மிமீ என்கிற மார்க்கை தொட்டுள்ளது. அதுவே, வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் கார் மற்ற இரு கார்களை காட்டிலும் கூடுதல் அகலமானதாக மற்றும் உயரமானதாக உள்ளது.
இவ்வாறு நீளம், அகலம், உயரம் என மூன்றிலும் மற்ற இரு கார்கள் உடன் ஒப்பிடுகையில், புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ சிறியதாக உள்ளது. ஆனால், வீல்பேஸ் எனப்படும் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தில் இக்யூஏ முன்னிலை வகிக்கிறது. இந்த புதிய பென்ஸ் காரின் வீல்பேஸ் 2729மிமீ ஆகும். பொதுவாக, வீல்பேஸ் அதிகமாக இருந்தால், அதற்கேற்ப காருக்குள் கேபின் நன்கு விசாலமானதாக இருக்கும்.

பவர்டிரெயின்: பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 மற்றும் வால்வோ எக்சி40 ரீசார்ஜ் கார்கள் ட்யூயல்-மோட்டார் ஆப்ஷனில் இந்தியாவில் கிடைக்கின்றன. இதில் வால்வோ எலக்ட்ரிக் கார் சிங்கிள்-மோட்டார் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. ஆனால், மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ ஆனது சிங்கிள்-மோட்டார் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கேற்ப கார் பெறும் இயக்க ஆற்றல் அளவுகளும் வேறுப்படும்.
அதாவது, சிங்கிள்-மோட்டாரில் இருந்து அதிகமாக இயக்க ஆற்றல் கிடைக்காது. புதிய இக்யூஏ காரில் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 385 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் மட்டுமே கிடைக்கும். இதனால், 0-இல் இருந்து 100kmph வேகத்தை எட்ட இந்த எலக்ட்ரிக் பென்ஸ் காருக்கு குறைந்தது 8.6 வினாடிகள் தேவைப்படுகிறது. அதுவே, ட்யூயல்-மோட்டார் உடன் கிடைக்கும் எக்ஸ்சி40 ரீசார்ஜ் கார் இந்த வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது.

பேட்டரி & ரேஞ்ச்: எலக்ட்ரிக் கார்களில் முக்கியமான விஷயம் இதுவாகும். ஏனெனில், சார்ஜ் நிரப்பினால் கார் அதிகப்பட்சமாக எவ்வளவு தொலைவிற்கு செல்லும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். இந்த விஷயத்தில் மற்ற இரண்டை விட, மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ ஆனது முன்னிலை வகிக்கிறது. இந்த காரில் 70.5kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 560கிமீ தொலைவிற்கு காரை இயக்கலாம் என மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுப்பக்கம், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 காரில் பொருத்தப்படும் 66.4kWh பேட்டரியின் மூலம் 440கிமீ வரையிலான ரேஞ்சை மட்டுமே பெற முடிகிறது. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரில் 69kWh மற்றும் 78kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் 69kWh பேட்டரி உடன் 475கிமீ வரையிலான ரேஞ்சையும், 78kWh பேட்டரி உடன் 505கிமீ வரையிலான ரேஞ்சையும் பெற முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீளம், அகலம், உயரத்தை குறைவாக கொடுத்திருந்தாலும், புதிய இக்யூஏ எலக்ட்ரிக் காரில் பயணிகளுக்கு முக்கியமாக என்ன தேவையோ அதனை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஒரு விஷயத்தில் மட்டுமின்றி, மற்ற விஷயங்களிலும் போட்டி கார்களுக்கு சவால்விடும் வகையில் இக்யூஏ காரை மெர்சிடிஸ் உருவாக்கியுள்ளது. அதேநேரம், இந்த புதிய எலக்ட்ரிக் பென்ஸ் காரின் விலையும் குறைவாக நிர்ணயிக்கப்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









