கடைசியா எப்போ சார்ஜ் செய்தோம் என்பதையே மறந்துடுவீங்க... 500கிமீ-க்கு ஓடக்கூடிய புது எலக்ட்ரிக் பென்ஸ் கார்!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் புத்தம் புதிய இக்யூஏ (EQA) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் காருடன் சேர்த்து, இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இக்யூபி (EQB) எலக்ட்ரிக் காரையும் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு மேம்படுத்தி மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூபி ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை என்ன? புதியதாக சேர்க்கப்பட்டுள்ள அம்சங்கள் என்னென்ன? என்பது உள்பட இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலையாக ரூ.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் விலை குறைவான எலக்ட்ரிக் பென்ஸ் காராக இக்யூஏ விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த சூட்டோடு சூடாக, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் இக்யூபி எலக்ட்ரிக் காரையும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு மேம்படுத்தி உள்ளது. இக்யூஏ காரின் அறிமுகத்திற்கு முன்பு வரையில் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைத்துவந்த எலக்ட்ரிக் காராக இக்யூபி விளங்கி வந்தது. 250+ மற்றும் 350 4மேட்டிக் என 2 விதமான வேரியண்ட்களில் புதிய மெர்சிடிஸ் இக்யூபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இக்யூபி 250+ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.70.90 லட்சமும், இக்யூபி 350 4மேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.77.5 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூபி ஃபேஸ்லிஃப்ட் முதல்முறையாக உலகளவில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு இந்த காரை தற்போது இந்தியாவில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்துள்ளது.

புதிய இக்யூபி ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்று பார்த்தால், காரின் முன்பக்கத்தில் ஸ்டார் பேட்டர்னில் கிரில் பகுதி வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார்களுக்கு கிரில் பகுதி தேவையில்லை. ஆனால், தனது எலக்ட்ரிக் கார்களில் இவ்வாறு போலியான கிரில் பகுதியை மெர்சிடிஸ் வழங்குகிறது. முன்பக்க பம்பரின் வடிவத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், காரின் பின்பக்கத்தில் டெயில்லேம்ப் சிஸ்டத்திலும் புதிய பேட்டர்ன் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டார் பேட்டர்ன் கிரில் பகுதியை போன்று, காருக்கு உள்ளேயும் டேஸ்போர்டு மற்றும் கதவுகளுக்கு பின்பக்கத்தில் ஸ்டார் பேட்டர்னில் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. டேஸ்போர்டில் 10.25 இன்ச்சில் வழங்கப்படும் இரு திரைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவை புதிய இக்யூபி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் தொடரப்பட்டுள்ளன. தொழிற்நுட்ப அம்சங்களில் அப்டேட்கள் என்று பார்த்தால், எம்பக்ஸ் சிஸ்டம் 2வது ஜென்ரேஷனுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், 710-வாட் பர்ம்ஸ்டர் ஆடியோ சிஸ்டமும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இக்யூபி 350 4மேட்டிக் வேரியண்ட்டில் ட்யூயல்-மோட்டார் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 250+ வேரியண்ட்டை காட்டிலும் 350 4மேட்டிக் வேரியண்ட்டில் மோட்டார் பவர் & டார்க் திறன் சற்று கூடுதலாக கிடைக்கும். அதேபோல், 250+ வேரியண்ட்டை காட்டிலும் 350 4மேட்டிக் வேரியண்ட்டில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை 2.5 வினாடிகள் விரைவாகவே எட்டிவிட முடியும்.
இருப்பினும், இரு வேரியண்ட்களும் எட்டும் டாப்-ஸ்பீடு ஒன்றே. அதேபோல், 2 வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாக 70.5kWh பேட்டரி தான் கிடைக்கும். 350 4மேட்டிக் வேரியண்ட்டில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 447கிமீ தொலைவிற்கும், 250+ வேரியண்ட்டில் 535கிமீ தொலைவிற்கும் பயணிக்க முடியும். இந்தியாவில் இக்யூபி எலக்ட்ரிக் கார் முதல்முறையாக கடந்த 2023 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இக்யூஏ கார் அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில் இக்யூபி காரையும் மெர்சிடிஸ் நிறுவனம் அப்டேட் செய்திருப்பது புத்திசாலித்தனமான முடிவாகும். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் இந்தியாவில் இக்யூஏ, இக்யூபி, இக்யூஇ மற்றும் இக்யூஎஸ் என மொத்தம் 4 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக இந்த ஆண்டு முடிவதற்குள் மேலும் 2 எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









