எல்லாம் முடிய போகுது... பென்ஸ் கார் வாங்கும் ஆசையை குழி தோண்டி புதைக்க வேண்டியதுதான்!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவின் நம்பர் ஒன் சொகுசு கார் நிறுவனமாக விளங்குகிறது. சுமார் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட கார் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்யும் மெர்சிடிஸ் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம் கார்களை அசால்ட்டாக விற்பனை செய்து வருகிறது. இதனால், உலகளவில் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு நம் இந்தியா முக்கியமான மற்றும் பெரிய அளவிலான சந்தையாக விளங்குகிறது. இருப்பினும், இந்தியாவில் கார்களின் விலைகளை அதிகரிக்க மெர்சிடிஸ் தயாராகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பென்ஸ் கார்களுக்கு இந்தியாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே மக்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பு உள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட மெர்சிடிஸ் நிறுவனம், விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய துவங்கியது. அதேபோல், பென்ஸ் கார்கள் மட்டுமின்றி, மெர்சிடிஸ்-மேபக், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி உள்ளிட்ட விலைமிக்க மற்றும் பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் கார்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

இதனால், விலை குறைவான கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகி எந்த அளவிற்கு முன்னிலை வகிக்கிறதோ அதே அளவிற்கு விலைமிக்க கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ் உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு அதன் ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ் மற்றும் கார்களில் தொடர்ச்சியான அப்டேட்கள் உள்ளிட்டவை காரணமாகும்.
இருப்பினும், மற்ற கார் நிறுவனங்களை போன்று மெர்சிடிஸ் நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் கார்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், விரைவில் இந்தியாவில் மெர்சிடிஸ் கார்கள் அனைத்தின் விலைகளும் அதிகப்பட்சமாக 3% வரையில் உயர்த்தப்பட உள்ளன. வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

வழக்கம்போல், இந்த விலையுயர்வுக்கும் அதிகரித்துவரும் கார் உற்பத்தி செலவையும், போக்குவரத்து செலவையும் மெர்சிடிஸ் நிறுவனம் காரணமாக சுட்டிக்காட்டி உள்ளது. இந்த விலை அதிகரிப்பின்படி, இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான காரான ஜிஎல்சி -இன் விலை ரூ.2 லட்சம் வரையிலும், அதிகப்பட்சமாக, விலைமிக்க மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 காரின் விலை ரூ.9 லட்சம் வரையிலும் அதிகரிக்கப்பட உள்ளது.
கடந்த 9 மாதங்களுக்கு பின் கொண்டுவரப்படும் இந்த விலை அதிகரிப்பு குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் & சிஇஓ சந்தோஷ் ஐய்யர் கூறுகையில், "கடந்த 3 காலாண்டுகளில், அதிகரித்துவரும் பொருள் விலை, ஏற்ற இறக்கத்திற்கான செலவுகள், அதிகரித்த போக்குவரத்து செலவுகள் மற்றும் பணவீக்க செலவு ஆகியவற்றால் எங்கள் செலவுக் கட்டமைப்பில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறோம்.

எங்களின் செயல்பாட்டு செலவுகளை மேம்படுத்துவதன் மூலமும், அதிக செயல்திறனை அதிகரிப்பதன் மூலமும் இந்த செலவு அழுத்தங்களை உள்வாங்கி கொண்டுள்ள நிலையில், தற்போதைய சவால்களை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த அடிமட்டமும் பாதிக்கப்படுகிறது. எங்கள் வணிகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, பெயரளவில் விலை திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றார்.
தற்சமயம் விற்பனையில் உள்ள அனைத்து மெர்சிடிஸ் கார்களையும் டிசம்பர் 31ஆம் வரைக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த விலை அதிகரிப்பு பொருந்தாது. ஆதலால், மெர்சிடிஸ் காரை வாங்க நீண்ட நாட்களாக யோசித்து வருபவர்கள் உடனடியாக உங்களது விருப்பமான காரை புக் செய்யுங்கள். இந்தியாவில் விற்பனையில் இல்லாத மெர்சிடிஸ் கார்களுக்கும் இந்த விலை அதிகரிப்பு ஜனவரி 1க்கு பிறகு கொண்டுவரப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனத்தின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும், தொடர்ந்து அதனை சிறப்பானதாக வைத்திருக்க, இவ்வாறான விலை அதிகரிப்புகள் அவசியமாகின்றன. இதனால், துவக்கத்தில் கார் விற்பனையில் சிறிய தொய்வு ஏற்படும் என்றாலும், அதனை சரிச்செய்யும் விதமாக மெர்சிடிஸ் நிறுவனம் சில சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









