காருக்குள்ளேயே செல்ஃபி கேமிரா.. இந்தியர்களுக்காகவே ரெடி பண்ணியிருக்காங்க! தீபாவளிக்கு இத வாங்கிடலாம்!
இந்திய பணக்காரர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் (Mercedes Benz E-Class Long Wheelbase) சொகுசு கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இன்றே (அக்டோபர் 9) இந்த காரின் அறிமுகம் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது. இது நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான 12 ஆவது அறிமுகம் ஆகும். நடப்பு 2024 ஆம் ஆண்டு முடிவடைய 2 மாதங்கள் 22 நாட்களே உள்ளன. இதற்குள்ளாகவே இத்தனை சொகுசு கார்களை நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்.
இந்தியாவில் வைத்தே இந்த கார் மாடல் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இங்கிருந்தே உலக சந்தைகளுக்கும் இந்த கார் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விற்பனையில் இருந்த இ-கிளாஸ் எல்டபிள்யூபி-வைக் காட்டிலும் மிக அதிக சிறப்பம்சங்களை இந்த காரில் வழங்கி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

குறிப்பாக, இந்தியாவிற்கு ஏற்ற அம்சங்கள் பலவற்றை அதில் வழங்கி இருப்பதாக அது கூறியிருக்கின்றது. இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் சொகுசு கார் மாடல்களில் இ-கிளாஸ்-ம் ஒன்றாகும். இதுவரை இந்த கார் மாடல் 56 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.
மேலும், இந்தியாவில் நீண்ட காலமாக உற்பத்தியில் இருக்கும் கார் மாடலகவும் இது காட்சியளிக்கின்றது. 1995 இல் இந்த காரை மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இதைவைத்தே இந்த காருக்கு என்ன மாதிரியான வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நம்மால் கணித்துவிட முடியும்.
இந்தியாவில் புதிய இ-கிளாஸ் எல்டபிள்யூபி ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இ200 (E200), இ220டி (E220d) மற்றும் இ450 மேட்டிக் (E450 4MATIC) ஆகியவையே அவை ஆகும். மேலும், இந்த காரை சிறப்பம்சங்களை அதிகம் தாங்கிய காராகவும் பென்ஸ் தயார் செய்திருக்கின்றது.
அந்தவகையில் 3 ஆம் தலைமுறை எம்பியூஎக்ஸ் சூப்பர் ஸ்கிரீனை வழங்கி இருப்பது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. ஜீரோ லேயர் மற்றும் ஏஐ வசதிக் கொண்ட திரை ஆகும். இந்த திரை வாயிலாகவே பென்ஸ் வழங்கி இருக்கும் புதிய வசதியான செல்ஃபி வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியர்களைக் கவரும் சில அம்சங்களை வழங்கி இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கும் வசதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அம்சத்தின் வாயிலாக காருக்குள் அமர்ந்தபடியே செல்ஃபி மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொள்ள முடியும். மேலும், காருக்குள் இருந்தபடியே வீடியோ காலும் பேசிக் கொள்ள முடியும்.
இதுதவிர, சில முக்கிய அம்சங்களையும் இந்த திரையின் ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலக பென்ஸ் நிறுவனம் ஆட்டோமேட்டிக்காக மாற்றி இருக்கின்றது. இத்துடன், இந்த திரையை தனிப்பயனாக்கம் வாயிலாக 12 விதமான ஸ்டைல்களில் மாற்றிக் கொள்ள முடியும். இந்த காரை, காருக்காக அல்லாமல் சிலர் இந்த மூன்றாம் தலைமுறை எம்பியூஎக்ஸ் திரைக்காகவே வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல், இந்திய இளைஞர்களைக் கவரும் விதமாகவே இதன் மியூசிக் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. 17 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 எக்சைடர்கள் கொண்ட பர்மெஸ்டர் 4டி சரவுண்டு சவுண்டு சிஸ்டமே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், சொகுசான ரைடு அனுபவத்தை அதிகம் விரும்புவோர்களைக் கவருகின்ற வசதிகளையும் இந்த காரில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், இதன் இருக்கைக்கு 36 டிகிரி வரை ரெக்லைன் செய்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடை பகுதிக்கான நீட்டிக்கப்பட்ட சப்போர்ட், கழுத்துக்கான சப்போர்ட், சூரிய ஒளியைத் தவிர்க்கும் வசதிக் கொண்ட விண்டோ என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் சாஃபர் பேக்கேஜ் (Chauffeur package)-ம் வழங்கப்படும் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.
இந்த கார் சொகுசு அம்சங்களை மட்டுமல்ல பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கியதாகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 8 ஏர்பேக்குகள், டிரைவரின் முழங்காலுக்கான பாதுகாப்பு ஏர் பேக், மையப் பகுதி ஏர் பேக், பிளைண்டு ஸ்பாட் அசிஸ்ட் என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த சூப்பரான சொகுசு காருக்கு அறிமுக விலையாக ரூ. 78.5 லட்சம் நிர்ணயம் செய்திருக்கின்றது. இது வெறும் ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த வார இறுதிக்குள் இதன் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும். ஆனால், இ200 வேரியண்டின் டெலிவரி பணிகளே முதலில் தொடங்கப்பட இருக்கின்றது. இ220டி தீபாவளிக்கும், 450 4மேட்டிக் வேரியண்டின் டெலிவரி பணிகள் நவம்பரிலும் தொடங்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பது 6 ஆம் தலைமுறை இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் மாடல் ஆகும். இதற்கும் இந்தியர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்பவே சிறப்பம்சங்களை இந்த கார் மடாலில் பென்ஸ் நிறுவனம் தற்போது வாரி வழங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








