1 கோடி ரூபாய்க்குள் இப்படிப்பட்ட பென்ஸ் காரா... பணக்காரர்கள் இப்போதே ரெடியா இருக்காங்க!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) இந்தியாவில் அதிகளவில் லக்சரி கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்குகிறது. கிட்டத்தட்ட 30 விதமான கார்கள் மெர்சிடிஸ்-பென்ஸில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய நிறுவனத்தில் இருந்து இரு புதிய கார்கள் நாளை (ஆகஸ்ட் 8) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. மெர்சிடிஸ் நிறுவனத்தின் சி-கிளாஸ் குடும்பத்தில் இருந்து விற்பனைக்குவர உள்ள இந்த புதிய கார்கள் இரண்டும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட போவதில்லை. அதாவது, முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த புதிய மெர்சிடிஸ் கார்களை பற்றிய சில முக்கியமான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி.எல்.சி 43 கூபே (Mercedes-AMG GLC43 Coupe): மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்கள் செயல்திறன்மிக்கவை மற்றும் அதிவேகமாக இயங்கக்கூடியவை ஆகும். இதன் காரணமாகவே ஏஎம்ஜி கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும், புதிய ஏஎம்ஜி ஜி.எல்.சி43 கூபே ஆனது விலை குறைவான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காராக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.90 லட்சம் - ரூ.95 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி காரின் அடிப்படையில் புதிய ஏஎம்ஜி ஜி.எல்.சி43 கூபே கார் உருவாக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி.எல்.சி43 கூபே கார் இந்தியாவில் 2 வருடங்களுக்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்தது.
அந்த சமயத்தில் விற்பனையில் இருந்த ஏஎம்ஜி ஜி.எல்.சி43 கூபே காரில் 3.0 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டது. தற்போது அதற்கு பதிலாக, 2.0 லிட்டர் ட்வின் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 421 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

காருக்குள் டேஸ்போர்டில் 11.9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே கொடுக்கப்பட உள்ளது. ஏஎம்ஜி கார் என்பதால், இருக்கை நன்கு ஸ்டைலிஷானதாகவும், ஏஎம்ஜி கார்களுக்கே உண்டான ஸ்டேரிங் சக்கரத்தையும் இந்த காரில் எதிர்பார்க்கலாம். ஸ்டேரிங் சக்கரத்தில் நிச்சயமாக டிரைவ் மோட் கண்ட்ரோல்களை எதிர்பார்க்கலாம். அதேபோல், காருக்குள் நிறைய இடங்களில் சிவப்பு நிற டச் இருக்கும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் சி.எல்.இ கேப்ரியோலெட் (Mercedes-Benz CLE Cabriolet): விருப்பத்திற்கேற்ப மேற்கூரையை திறந்து/ மூடி கொள்ளக்கூடிய கார்கள், கேப்ரியோலெட் கார்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த வகை கார்கள் பெரும்பாலான சொகுசு கார் நிறுவனங்களில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் புதியதாக கொண்டுவரும் கேப்ரியோலெட் கார் தான் சி.எல்.இ கேப்ரியோலெட் ஆகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் கேப்ரியோலெட் மற்றும் இ-கிளாஸ் கேப்ரியோலெட் கார்களுக்கு பதிலாக கொண்டுவரப்படும் கார் சி.எல்.இ கேப்ரியோலெட் ஆகும். வழக்கமான சி-கிளாஸ் உடன் ஒப்பிட்டால், இந்த புதிய சி.எல்.இ கேப்ரியோலெட் கார் கூடுதல் நீளமானது ஆகும். இருப்பினும், வெறும் 2 கதவுகள் மட்டுமே இந்த காரில் வழங்கப்படுகின்றன. அதிகப்பட்சமாக 4 பேர் இந்த காரில் சவுகரியமாக பயணிக்க முடியும்.
மெர்சிடிஸ் சி-கிளாஸ் காரில் இருந்து நிறைய தொழிற்நுட்ப வசதிகள் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சி.எல்.இ கேப்ரியோலெட் கார் மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. சி.எல்.இ200 மற்றும் சி.எல்.இ300 4மேட்டிக் என்பன அவை ஆகும். இவை இல்லாமல், ஏஎம்ஜி வேரியண்ட்டிலும் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, புது மெர்சிடிஸ் கார் அறிமுகங்களை பணக்காரர்களும், விஐபிகளும் கூடுதல் கவனத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பர். அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த இரு புதிய மெர்சிடிஸ் கார்கள் உள்ளன. குறிப்பாக, விலை குறைவான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காராக அறிமுகம் செய்யப்படும் ஏஎம்ஜி ஜி.எல்.சி43 கூபே கார் இந்திய செல்வந்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









