புக் பண்ண பணக்காரர்கள் எல்லாரும் ரெடியா இருக்காங்க... கோடி ரூபாய்க்கு கம்மியான விலையில்!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் (E-Class LWB) காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான கார் அறிமுக நிகழ்ச்சியில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு கலந்துக் கொண்டது. அப்போது காரை சுற்றி நாங்கள் எடுத்த வீடியோவை இங்கே பார்க்கலாம். மேலும், இந்த காரின் அறிமுக தேதி குறித்த விபரங்களும் நமக்கு தெரியவந்துள்ளன. அவற்றை பற்றியும், இந்த புதிய பென்ஸ் காரை பற்றியும் கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
உலகளவில் பிரபலமான பென்ஸ் கார்களுள் ஒன்று மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் ஆகும். லக்சரி செடான் ரக காரான இ-கிளாஸ் நன்கு நீளமானதாக இருக்கும். இத்தகைய காரின் லாங் வீல்பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பொதுவாகவே, லாங் வீல்பேஸ் கார் என்றால் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் அதிகமாக இருக்கும்.

இவை இரண்டும் சேர்ந்த கலவையாக, புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் சாலையில் மிதக்கும் கப்பல் போன்று நன்கு நீளமாக உள்ளது. கடந்த காலங்களில் இருந்து இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட பென்ஸ் காராக இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் விளங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய காரை மேலும் மெருக்கேற்றி விரைவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த காருக்கான புக்கிங்குகள் இந்த செப்டம்பர் மாதத்தில் துவங்கப்பட்டு, சில கஸ்டமர்களுக்கு முடிந்தவரையில் வருகிற தீபாவளிக்கு முன்னதாகவே காரை டெலிவிரி செய்ய மெர்சிடிஸ்-பென்ஸ் விரும்புகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.80 லட்சத்தில் இருந்து ரூ.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம். இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் விலை தற்சமயம் ரூ.89 லட்சமாக உள்ளது.

விற்பனையில் இருக்கும் பழைய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் உடன் ஒப்பிடுகையில், புதிய மாடல் நிறைய விஷயங்களில் மேம்பட்டதாக உள்ளது. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் முன்பை விட 15மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப காரின் நீளமும் 14மிமீ அதிகரித்துள்ளது. காரின் உயரமும் 13மிமீ உயர்த்தப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் அகலத்தை மட்டும் அதிகரிக்காமல், மற்ற அளவுகளில் கார் பெரியதாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காரின் நீளம் சுமார் 5100மிமீ-ஐ நெருங்கியுள்ளது. புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் முன்பக்கத்தில் ரேடியேட்டர் கிரில்லில் மெர்சிடிஸின் ட்ரை-ஸ்டார் லோகோ வழங்கப்பட்டுள்ளது. லோகோவை சுற்றிலும் 3டி தோற்றமளிக்கக்கூடிய வகையில் மெர்சிடிஸ் லோகோக்கள் சிறியதாக கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றிற்கு மேலே எல்இடி ஹை-பெர்ஃபார்மன்ஸ் ஹெட்லேம்ப்கள் மற்றும் டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய இ-கிளாஸ் காரில் 18 இன்ச்சில் 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் மற்றும் பறித்து இழுக்கக்கூடிய வகையில் டோர் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சில்வர், கிரே, கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் புதிய இ-கிளாஸ் விற்பனை செய்யப்பட உள்ளது.
அதேபோல், காருக்குள் கேபினையும் கருப்பு மற்றும் இரு விதமான பழுப்பு நிறங்களில் தேர்வு செய்யலாம். காருக்குள் பின் இருக்கை வரிசையை சாதாரணமாக மேசையாக பெறலாம் அல்லது அல்ட்ரா லக்சரி தரத்தில் இரு இருக்கைகளாக பெறலாம். 8 ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தை பெறவுள்ள புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரில் 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செல்வந்தர்கள் பலருக்கு பிடித்தமான காராக மெர்சிடிஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் விளங்குகிறது. நம் நாட்டில் விற்பனையில் ஆடி ஏ6 மற்றும் ஜாகுவார் எக்ஸ்.எஃப் கார்களின் போட்டியை மெர்சிடிஸ் இ-கிளாஸ் எதிர்கொள்ள உள்ளது. இவற்றை விட, சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் போட்டி மெர்சிடிஸ் இ-கிளாஸுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications









