பிசியான சாலையில் வித்தியாசமான தோற்றத்தில் ரவுண்ட் அடித்த எலக்ட்ரிக் கார்!! உள்ளே வேற லெவலில் இருக்கு!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்று இந்தியாவில் சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் விற்பனையில் உள்ள இந்த எலக்ட்ரிக் கார் எதற்காக இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது? இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது? என்பது உள்பட இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் காரை வாங்குவோரின் எண்ணிக்கை நம் நாட்டிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, புது புது எலக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் க்ளவுட் இவி என்கிற புது எலக்ட்ரிக் காரை அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய எம்ஜி க்ளவுட் இவி காரின் இந்திய அறிமுகம் வருகிற 2025ஆம் ஆண்டில் இருக்கலாம். இந்த நிலையில், இந்தியாவில் எம்ஜி க்ளவுட் இவி கார் ஒன்று முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்ஜி மோட்டாரும், இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனமும் சமீபத்தில்தான் கூட்டணி சேர்ந்தன.
இந்த கூட்டணியில் இருந்து பல்வேறு புதிய கார்கள் எம்ஜி பிராண்டில் இருந்து அடுத்தடுத்ததாக வெளிவரவுள்ளன. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இனி கூடுதல் தீவிரமாக ஆர்வம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள எம்ஜி எலக்ட்ரிக் கார்களை அடுத்த சில வருடங்களுக்கு இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

இந்த வகையில், சீனாவில் போஜுன் யுண்டோ என்கிற பெயரிலும், இந்தோனிஷியாவில் வுல்லிங் க்ளவுட் இவி என்கிற பெயரிலும் விற்பனையில் இருக்கும் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் எம்ஜி க்ளவுட் இவி என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், எம்ஜி க்ளவுட் இவி காரின் நீளம் 4,295மிமீ, அகலம் 1,850மிமீ மற்றும் உயரம் 1,652மிமீ ஆகும்.
இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் தாராளமாக 5 பேர் வரையில் பயணம் செய்யலாம். சீனாவிலும், இந்தோனிஷியாவிலும் க்ளவுட் இவி எலக்ட்ரிக் காரில் 37.9kWh மற்றும் 50.6kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் 37.9kWh பேட்டரி 360கிமீ வரையிலான மைலேஜையும், 50.6kWh பேட்டரி 460கிமீ வரையிலான மைலேஜையும் வழங்கக்கூடியதாக உள்ளது.

காருக்கு உள்ளே ஸ்டேரிங் சக்கரத்துக்கு பின்னால், 8.8 இன்ச்சில் ஃபுல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சென்டர் கன்சோல் திரையை 10.1 இன்ச் அல்லது கஸ்டமர்கள் விருப்பப்பட்டால் 15.6 இன்ச்சிலும் வெளிநாடுகளில் பெற முடிகிறது. பயணிகளின் பாதுகாப்புக்கு மிக முக்கிய அம்சமாக அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கொடுக்கப்படுகிறது.
இவற்றுடன், எம்ஜி க்ளவுட் இவி காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கின்றன. லிங்க் ஓ.எஸ் 2.0 ஈக்கோலாஜிக்கல் காக்ப்பிட் உடன் உருவாக்கப்படும் எம்ஜி க்ளவுட் இவி காரில் தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளை பொறுத்தவரையில் எந்த குறையும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்திய ஆட்டோமொபைல் துறை மெல்ல, மெல்ல எலக்ட்ரிக்கை நோக்கி சாய்ந்து வருகிறது. ஆதலால், எம்ஜி க்ளவுட் இவி என்ற ஆசிய நாடுகளில் பிரபலமாக உள்ள எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு இது சரியான தருணமே ஆகும். இருப்பினும், கூடுதல் கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை வருகிற 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.
Image Courtesy: lolgod11


Click it and Unblock the Notifications









