9 பேர் வரை தாராளமா போகலாம்... சாலையில் மிதக்கும் சொகுசு கப்பல்!! எம்ஜி பிராண்டில் தயாராகுது!
எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன் விற்பனையில் இருந்த எம்ஜி க்ளோஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு, விரைவில் மேம்படுத்தப்பட்ட க்ளோஸ்டர் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய க்ளோஸ்டர் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் தற்சமயம் சீனாவை சேர்ந்த குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டில் நுழைந்தது. இந்த நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட முதல் கார் ஹெக்டர் ஆகும். அதன்பின், அடுத்த சில மாதங்களில் புது, புது கார்களை எம்ஜி மோட்டார் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி கார் க்ளோஸ்டர் ஆகும். இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் விலையுயர்ந்த காராக விளங்கிய க்ளோஸ்டர், லெவல்-1 அடாஸ் தொகுப்பை கொண்ட இந்தியாவின் முதல் காராகவும் அறியப்பட்டது. இருப்பினும், க்ளோஸ்டர் காரின் விற்பனை நம் நாட்டில் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. விலை அதிகமாக இருந்ததினால், பணக்காரர்கள் கூட எம்ஜி க்ளோஸ்டர் கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்கவில்லை.
அதுமட்டுமின்றி, க்ளோஸ்டரை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்ததால், இந்த காரின் விற்பனையை இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் நிறுத்தியது. தற்போது, க்ளோஸ்டர் காரை மீண்டும் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனில் கொண்டுவர எம்ஜி மோட்டார் தயாராகி வருகிறது. எம்ஜி க்ளோஸ்டர் கார் வெளிநாடுகளில், எல்.டி.வி டி90 மற்றும் மேக்ஸஸ் டி90 என்கிற பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

எல்.டி.வி டி90 மற்றும் மேக்ஸஸ் டி90 கார்கள் சமீபத்தில்தான் வெளிநாடுகளில் அப்டேட் செய்யப்பட்டன. அந்த வகையில் க்ளோஸ்டர் காரும் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் கர்நாடகாவில் சாலை ஒன்றில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், சோதனை ஓட்டத்தின்போது கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பதை காணலாம். இதனால், புதிய க்ளோஸ்டர் காரின் முன்பக்க மற்றும் பின்பக்க தோற்றங்கள் கவனிக்கத்தக்க அளவில் மாற்றப்படும். அதேபோல், காரின் உட்பக்க கேபினும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ள க்ளோஸ்டர் காரின் முன்பக்கத்தில் 3-ஸ்லாட்களை கொண்ட புதிய & பெரிய அளவிலான கிரில் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல், காரின் முன்பக்கத்தில் க்யூப்-வடிவிலான ஹெட்லேம்ப் செட்-அப் இருப்பதையும் காண முடிகிறது. ஹெட்லேம்ப்புக்கு கீழே எல்இடி டி.ஆர்.எல்-கள் கிரில் பகுதி வரையில் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கார் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த சோதனை காரில் வழக்கமான டிசைனிலான அலாய் சக்கரங்களே பொருத்தப்பட்டுள்ளன.
காரின் பின்பக்கத்தில் திருத்தப்பட்ட டிசைனில் எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளன. இந்த டெயில்லேம்ப்கள் ஒன்றோரு ஒன்று இணைக்கப்பட்டதாக வழங்கப்படும். காருக்கு உள்ளே பெரிய அளவிலான டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, காரின் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. எம்ஜி க்ளோஸ்டரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி க்ளோஸ்டர் ஆனது ஒரு ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். அதாவது, எஸ்யூவி கார்களிலேயே அளவில் பெரிய கார்களுள் ஒன்று எம்ஜி க்ளோஸ்டர் ஆகும். இந்த காரில் தாராளமாக 9 பேர் வரையில் அமர்ந்து பயணிக்கலாம். கியா நிறுவனமும் அதன் புதிய கார்னிவல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதால், கியா - எம்ஜி மோட்டார் இடையேயான போட்டி பரபரப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









