இந்தியாவில் பலர் விரும்பி வாங்கும் எம்ஜி காரில் புது அப்டேட்!! காஸ்ட்லீயான சன்ருஃப் கம்மியான விலையில்...!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் ஹெக்டர் (Hector) காரில் புதியதாக ஷைன் புரோ (Shine Pro) மற்றும் செலக்ட் புரோ (Select Pro) வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எம்ஜி கார்களை பற்றிய விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில வருடங்களில் கார்கள் விற்பனையை துவங்கிய நிறுவனங்களுள் ஒன்று எம்ஜி மோட்டார் ஆகும். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த கார் பிராண்டாக இருப்பினும், சீனாவை சேர்ந்த குழுமத்தின் கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார், 2019 ஜூன் மாதத்தில் இந்தியாவில் முதல் காராக ஹெக்டரை அறிமுகம் செய்தது.

2019இல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இத்தனை வருடங்களில் சிலமுறை ஹெக்டர் கார்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், ஹெக்டர் காரில் புதிய வேரியண்ட்களையும் அவ்வப்போது எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது, ஹெக்டர் காரில் புதியதாக ஷைன் புரோ மற்றும் செலக்ட் புரோ என்கிற 2 விதமான வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
புதிய ஹெக்டர் ஷைன் புரோ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15,99,800 ஆகவும், செலக்ட் புரோ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17,29,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வேரியண்ட்களில் மிக முக்கிய அம்சமாக 14 இன்ச்சில் நன்கு பெரிய அளவில் எச்டி டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு பெரியது என்றால், இந்தியாவில் கிடைமட்ட வடிவில் இவ்வளவு பெரிய டச் ஸ்க்ரீனை கொண்ட மிகவும் சில கார்களுள் எம்ஜி ஹெக்டரும் ஒன்றாகும்.

ஷைன் புரோ வேரியண்ட்டை காட்டிலும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்ப செலக்ட் புரோ வேரியண்ட்டில் ட்யூயல்-பேன் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய ஷைன் புரோ வேரியண்ட்டில் சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெக்டர் காரின் இந்த இரு புதிய வேரியண்ட்களும் புதிய டேஸ்போர்டு டிசைனை பெற்றுள்ளன.
அத்துடன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட்டிவிட்டி வசதியும் இந்த வேரியண்ட்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன், எம்ஜி ஹெக்டர் காரில் வழக்கமாக வழங்கப்படும் அம்சங்களும் இந்த புதிய வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த வகையில், வயர்லெஸ் சார்ஜர், 17.78 செ.மீ எல்சிடி டிஸ்பிளே உடன் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் புஷ் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான் ஆகியவற்றை இந்த புதிய புரோ வேரியண்ட்களில் பெறலாம்.

காருக்கு வெளியே ஃப்ளோட்டிங் லைட் டர்ன் இண்டிகேட்டர்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி கனெக்டட் டெயில்லைட்ஸ் உள்ளிட்டவை கிடைக்கும். இந்தியாவில் தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் & சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
மறுப்பக்கம், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வாங்க முடியும். இந்தியாவில் விற்பனையில் எம்ஜி ஹெக்டர் காருக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் கார்கள் போட்டியாக விளங்குகின்றன. இருப்பினும், இவற்றுடன் ஒப்பிடுகையில் எம்ஜி ஹெக்டர் சற்று விலைமிக்கதாக விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா, எக்ஸ்யூவி700 கார்களுடன் ஒப்பிட்டால், ஹெக்டர் கார்கள் விற்பனை பெரிய அளவில் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே, ஹெக்டரின் விற்பனையை அதிகரிக்க இவ்வாறான புது, புது வேரியண்ட்களின் அறிமுகங்கள் அவசியம் ஆகும். இருப்பினும், இந்த புதிய வேரியண்ட்களை இன்னும் குறைவான விலையில் கொண்டுவந்திருந்தால், வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றிருக்கலாம்.


Click it and Unblock the Notifications









