அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வரும் ஒரு சில நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). Morris Garages என்பதன் சுருக்கம்தான் MG. தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) என மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி விற்பனை செய்து வருகிறது.
வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வலிமையாக்கும் பணிகளை எம்ஜி நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜர்களை அதிக அளவில் அமைக்கும் பணிகளை எம்ஜி நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில், 1,000 நாட்களில் 1,000 சார்ஜர்களை அமைக்கும் திட்டத்தை, கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில் எம்ஜி நிறுவனம் தொடங்கியது. இதில் தற்போது 500 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

இந்த 500 நாட்களில் 500 சார்ஜர்களை எம்ஜி நிறுவனம் அமைத்து விட்டது. அப்பார்ட்மெண்ட்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த எலெக்ட்ரிக் கார் சார்ஜர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோராயமாக இந்தியாவின் 50 முக்கியமான நகரங்களில் இந்த சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்துமே 7.4kW சார்ஜர்கள் ஆகும்.
எக்ஸீகாம் டெலிசிஸ்டம்ஸ் (Exicom Telesystems), எலெக்ட்ரீஃபீ (ElectreeFi), இசார்ஜர்பேஸ் (EchargerBays), ஐயோனேஜ் (Ionage) மற்றும் ஸ்டாடிக் & ஹைவே டிலைட் (Statiq & Highway Delite) ஆகிய கூட்டணி நிறுவனங்களின் உதவியின் மூலமாக எம்ஜி நிறுவனம் இந்த 500 சார்ஜர்களையும் பொருத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1 சார்ஜர் என 500 நாட்களில் 500 சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. எஞ்சிய 500 சார்ஜர்களும் 500 நாட்களில் பொருத்தப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி எம்ஜி நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் கார் விலை உயர்ந்தது ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 18.98 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மறுபக்கம் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார், விலை குறைவான ஒன்றாக உள்ளது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.99 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் 9.24 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி நிறுவனம் 500 நாட்களில் 500 சார்ஜர்களை பொருத்தியிருப்பது சிறப்பான ஒரு விஷயம் என நாங்கள் கருதுகிறோம். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது வரவேற்கப்பட வேண்டிய என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது 3வது எலெக்ட்ரிக் காரை கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள் எம்ஜி நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருவது, 2 நன்மைகளை ஏற்படுத்தும். ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இது உதவி செய்யும். மற்றொன்று பெட்ரோல் (Petrol) மற்றும் டீசலின் (Diesel) மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைக்க உதவும். உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications