எம்ஜி நிறுவனத்துக்கு துணிச்சல் அதிகமாயிருச்சு.. எல்லா கார் உற்பத்தியாளர்களுக்கும் தலை வலியை ஏற்படுத்த போகுது!
இந்திய நிறுவனம் மாருதி (Maruti)யும், ஜப்பானிய நிறுவனம் சுஸுகி (Suzuki)-யும் இணைந்து இந்தியாவில் செயல்படுவதைப் போல, சீன நிறுவனத்திற்கு சொந்தமான கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி மோட்டார் (MG Motor)-ம், இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW)-ம் இந்திய சந்தைக்காக கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றன. அதாவது, மாருதி சுஸுகியைப் போலவே இந்தியாவில் தன்னுடைய ஆதிக்கத்தைப் பெருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இவர்கள் இருவரும் இணைந்திருக்கின்றனர். இந்த இணைவைத் தொடர்ந்து மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு வாகனம் என இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்திலும் அவர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே ஆட்டோ கார் இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார், இந்தியாவிற்காக ஐந்து புதுமுக கார் மாடல்களை கன்ஃபார்ம் செய்திருப்பதாக அதன் செய்தியில் தகவல் வெளியிட்டு இருக்கின்றது. இந்த கார்கள் அனைத்தும் 2025க்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்றும் அது தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஏற்கனவே நிறுவனம் சில புதுமுக வாகனங்களுக்கு இந்தியாவில் பேடண்ட் உரிமத்தைப் பெற்றிருக்கின்றது.

அதுதவிர, புதுமுக வாகனங்களை சோதனையோட்டம் செய்யும் பணிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், இந்தியாவிற்கான முதல் சியூவி (CUV) ரக காரைக் கொண்டு வரும் பணியிலும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி தற்போது களமிறங்கி இருக்கின்றது. இதுதவிர, இன்னும் நான்கு புதுமுக கார்களை அது இந்தியாக் கொண்டு வர இருப்பதே தற்போது உறுதியாகி இருக்கின்றது. அவற்றின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
கிளவுட் இவி (Cloud EV): இந்திய சந்தையில் முதலில் கிளவுட் இவி காரையே களமிறக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் மின்சார கார் மாடல் ஆகும். இந்த கார் மாடல் இந்தோனேசியா சந்தையில் உல்லிங் கிளவுட் இவி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுவே இந்தியாவில் கிளவுட் இவி எனும் பெயரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் வெளியீட்டைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் சுமார் ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் காராகவே இது விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுதவிர, இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலும் இந்த காரில் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஒன்று ஓர் முழு சார்ஜில் 360 கிமீ ரேஞ்ஜையும், மற்றொன்று 460 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.
பிங்கே இவி (Bingo EV): கிளவுட் இவி-யைத் தொடர்ந்து பிங்கே ஹேட்ச்பேக் ரக கார் மாடலையே இந்தியாவிற்கு கொண்டு வர இருக்கின்றது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார். இதுவும் ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே ஆகும். இது குட்டியான எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கான டிசைனை சமீபத்திலேயே பேடண்ட் பதிவு செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
இது ஓர் ஐந்து கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் ஆகும். ஒற்றை பேட்டரி பேக் தேர்விலேயே இந்த கார் நாட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 333 கிமீ ரேஞ்ஜை வழங்கக் கூடிய 31.9 kWh பேட்டரி பேக்கே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.
டி-பிரிவு எஸ்யூவி (D-segment SUV): மூன்றாவதாக, பெயர் அறியப்படாத அந்த கார் டி-பிரிவு எஸ்யூவி ரக காராகவே இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் குளாஸ்டர் கார் மாடலை போலவே மிகவும் பிரமாண்டமான தோற்றத்தில் அது இருக்கும். இது ஓர் பிளக்-இன் ஹைபிரிட் காராகவே விற்பனைக்கு வரபோகின்றது.
அதாவது, இதை சார்ஜ் செய்து மின்சார காராகவும், எரிபொருளை நிரப்பி ஐசிஇ காராகவும் இந்த காரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இப்போதைய நிலவரப்படி இந்த வசதியுடன் உல்லிங் ஸ்டார்லைட் எஸ் எனும் கார் மாடலையே எம்ஜி சீனாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதையே இந்தியாவிற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலே பார்த்த மூன்று கார் மாடல்களுடன் சேர்த்தே இன்னும் இரண்டு பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார் மாடலை அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதில் சைபர்ஸ்டர் (Cyberster)ஆக இருக்கலாம் என்றும், மற்றொன்று ஆர்7 (R7) எனும் கூபே எஸ்யூவி ரக காராக இருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த இரண்டும் எலெக்ட்ரிக் கார் மாடல்களே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவை முழுமையாக ஆளும் நோக்கிலேயே மிகப் பெரிய பிளானைப் போட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே மொத்தமாக ஐந்து கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் எம்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. எனவே அடுத்தடுத்து அது புதுமுக கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐந்து புதிய கார்களின் வருகையை தற்போது நிறுவனத்தின் எம்டி-யும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








