"பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ்"-ஆ... அப்படினா என்னங்க?.. விண்ட்ஸர் இவி-யை இந்த திட்டத்துக்காகவே வாங்கலாம்போலையே!
எம்ஜி (MG) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதன் விண்ட்ஸர் இவி (Windsor EV), எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. யாருமே நம்ப முடியாத கம்மியான விலையில் இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரூ. 9.99 லட்சமே அதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக அறிமுக நிகழ்வின்போது நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இத்துடன், "பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ்" (Battery-as-a-Service) என்கிற திட்டத்தின்கீழ் இந்த காரை விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.
பலருக்கு இந்த வார்த்தை புதிதாக தெரியலாம். மேலும், பேட்டரி- அஸ்- எ- சர்வீஸ் என்றால் என்ன என்கிற சந்தேகமும் பலருக்கு எழும்பியிருக்கக் கூடும். இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் எப்படி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும்? இதன் வாயிலாக நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பது பற்றியும் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

நம்மில் பலரின் வீட்டில் வாட்டர் ப்யூரிஃபையர் பன்பாட்டில் இருக்கும் என நம்புகின்றோம். ஒரு சில நிறுவனங்கள் தங்களின் வாட்டர் ப்யூரிஃபையரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு, ப்யூரிஃபையரை இலவசமாகவே வழங்குகின்றன. இதில் எப்படி அவர்கள் லாபம் சம்பாதிப்பார்கள் என நீங்கள் கேட்கலாம்.
ஆனால், அவர்கள் அதை இலவசமாக தருவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இதற்கு பின்னர்தான் அவர்களின் லாபத்திற்கான வேலையே நடக்கும். ஆமாங்க, நாம் அந்த ப்யூரிஃபையரை பயன்படுத்த பயன்படுத்த அதற்கான கட்டணத்தை மாத சந்தா போல் அந்த குறிப்பிட்ட ப்யூரிஃபையர் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.
இதே யுக்தியையே எம்ஜி நிறுவனம் இந்த கார் மாடலில் கடைபிடிக்க இருக்கின்றது. அதேவேளையில், காருக்கான கட்டணத்தை அவர்கள் வசூலித்துவிடுவார்கள் என கூறப்படுகின்றது. பேட்டரிக்கான தொகை கழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக அந்த பேட்டரியை வாடகைக்கு வழங்குவதைப் போல அவர்கள் வழங்குவார்கள். அதாவது, பயன்படுத்துவதற்கு ஏற்ப அந்த பேட்டரிக்கான கட்டணத்தை நாம் செலுத்த வேண்டியிருக்கும்.
இப்போதைய நிலவரப்படி, எம்ஜி நிறுவனம் கிலோமீட்டர் ரூ. 3.5 கட்டணமாக நிர்ணயித்து உள்ளது. உதாரணமாக மாதம் முழுக்க எம்ஜி விண்ட்ஸர் இவி காரை பயன்படுத்தி 1,000 கிமீ தூரம் பயணிக்கின்றோம் என வைத்துக் கொள்வோம். இவ்வளவு தூரம் பயன்படுத்தியதற்காக ரூ. 3 ஆயிரத்து 500-ஐ ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.
இத்தகைய திட்டத்தையே பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் எனும் பெயரில் எம்ஜி வழங்க இருக்கின்றது. மின்சார வாகனங்களின் அதிக விலைக்கு முக்கிய காரணமே பேட்டரிதான் என கருதப்படுகின்றது. இத்தகைய பேட்டரிக்கு ஆகும் பெருந்தொகை செலவை இந்த பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் எனும் திட்டத்தின் வாயிலாக தவிர்த்துவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆம், இந்த திட்டத்தின்கீழ் காரை வாங்குபவர்களிடம் பேட்டரிக்கான கட்டணம் தவிர்க்கப்பட்டுவிடும். இந்தியாவில் பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வரும் முதல் வாகனம் இது மட்டுமே என நினைத்துக் கொள்ள வேண்டாம். இதற்கு முன்னதாகவும் சில எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் குருகிராமை மையமாகக் கொண்டு இயங்கும் லெக்ட்ரிக்ஸ் இவி (Lectrix EV) நிறுவனம், ரூ. 49,999க்கு தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் திட்டத்தின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வந்தததாலேயே இவ்வளவு கம்மி விலையில் அது விற்பனைக்குக் கொண்டு வர முடிந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனத்தின் இந்த காரை பேட்டரி- அஸ்- எ- சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழ் வாங்கினாலும், அதை சார்ஜ் செய்வதற்கான கட்டணத்தை நாமே செலுத்த வேண்டும் என கூறப்படுகின்றது. அதாவது, எம்ஜி நிறுவனம் பேட்டரியை மட்டுமே வாடகைக்கு வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த திட்டத்தின் வாயிலாக பேட்டரி பராமரிப்பு பற்றிய கவலைகள் தீர்க்கப்பட்டு இருப்பதால் பலர் இந்த திட்டத்திற்காகவே விண்ட்ஸர் இவியை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








