பெட்ரோல் தீர்ந்து போனாலும் கொஞ்ச தூரத்திற்கு ஓடக்கூடிய கார்... மாருதி காருக்கு போட்டியாக எம்ஜி ஹைப்ரீட் கார்!!
எம்ஜி மோட்டார் (MG Motor) பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகின் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று. ஆனால் தற்சமயம், சீனாவை சேர்ந்த ஒரு ஆட்டோமொபைல் குழுமத்தின் கீழ் எம்ஜி செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து பல வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் பிரபலமான கார்களுள் ஒன்று எம்ஜி இசட்.எஸ் (MS ZS) ஆகும். இந்தியாவில் அஸ்டர் (Astor) என்கிற பெயரில் இசட்.எஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட 2025 எம்ஜி இசட்.எஸ் கார் சர்வதேச அளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எம்ஜி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யூவி காராக இசட்.எஸ் விளங்குகிறது. மேம்படுத்தப்பட்ட 2024 இசட்.எஸ் கார் ஆனது ஹைப்ரீட் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, எம்ஜி இசட்.எஸ் ஹைப்ரீட்+ என எம்ஜி மோட்டார் நிறுவனம் அழைக்கிறது. இந்த காரின் தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் என அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன.

2025 இசட்.எஸ் ஹைப்ரீட்+ காரின் முன்பக்கத்தில் ஸ்போர்டியரான டிசைனில் பெரிய அளவில் கிரில் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லேம்ப்கள் ஷார்ப்பான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய டிசைனிலான முன்பக்க பம்பரில் ரீடிசைனில் ஏர் இண்டேக் கொடுக்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. இதற்கேற்ப, வீல் ஆர்ச்சுகளின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது.
காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள், பம்பர் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவற்றின் வடிவங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. காருக்குள் டேஸ்போர்டில் ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்குவதற்கு இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை 7 இன்ச்சிலும், பொழுதுப்போக்கிற்கான இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே அளவில் பெரியதாக 12.3 இன்ச்சிலும் வழங்கப்பட்டுள்ளன.

மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கான வயர்லெஸ் சார்ஜிங் பேட் செவ்வக வடிவில் வழங்கப்பட்டுள்ளது. ஏசி காற்றுக்கான துளைகள் புதிய வடிவிலும், ஸ்டேரிங் சக்கரம் புதிய டிசைனிலும் கொடுக்கப்பட்டுள்ளன. 2025 இசட்.எஸ் ஹைப்ரீட்+ காரில் தொழிற்நுட்ப அம்சங்களாக ஆட்டோ ஹெட்லேம்ப்கள், கீலெஸ் எண்ட்ரீ, ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இவற்றுடன், 6 விதமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் 360-டிகிரி கேமரா போன்றவையும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. முன் இருக்கைகள் மற்றும் ஸ்டேரிங் சக்கரம் ஹீட்டட் வசதியை கொண்டுள்ளது. டிரைவிங் மோட்களாக ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் நார்மல் என்பனவற்றை இந்த எம்ஜி காரில் பெறலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, 2025 இசட்.எஸ் ஹைப்ரீட்+ காரில் அடாஸ் வழங்கப்பட்டுள்ளது.

2025 எம்ஜி இசட்.எஸ் ஹைப்ரீட்+ காரில் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 101 பிஎச்பி மற்றும் 250 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 100 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. 1.83kWh பேட்டரி பேக்கை பெறும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைந்து பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 192 பிஎச்பி மற்றும் 465 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும்.
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய எம்ஜி அஸ்டர் மற்றும் இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் கார் அடுத்த 2025ஆம் ஆண்டின் மத்தியில் அல்லது இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் அடுத்ததாக, விண்ட்சர் இவி என்கிற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது. புதிய எம்ஜி விண்ட்சர் இவி கார் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற நாடுகளில் இசட்.எஸ் என்கிற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த காரை இந்தியாவில் மட்டும் அஸ்டர் என்கிற பெயரில் விற்பனை செய்வதில் இருந்து நம் நாட்டு சந்தையை எம்ஜி மோட்டார் நிறுவனம் எந்த அளவிற்கு ஸ்பெஷலானதாக கருதுகிறது என்பதை அறியலாம். இருப்பினும், எம்ஜி அஸ்டர் காரின் விற்பனை இந்தியாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஆதலால், புதிய அஸ்டர் காரை அறிமுகம் செய்யும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications









