சீன காரை காப்பியடிச்சு உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் கார்... இந்தியாவில் விற்பனைக்கு வருது!!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அடுத்ததாக விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக விண்ட்சர் இவி காரை எம்ஜி மோட்டார் களமிறக்க உள்ளது. சீனாவில் விற்பனையில் உள்ள வுல்லிங் க்ளவுட் இவி எலக்ட்ரிக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக விண்ட்சர் இவி விளங்குகிறது. இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காரில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெளிப்புறம்: வுல்லிங் க்ளவுட் இவி எலக்ட்ரிக் காரின் ரீபேட்ஜ்டு வெர்சனாக உருவாக்கப்படுவதால், கிட்டத்தட்ட அதன் தோற்றத்தில் தான் விண்ட்சர் இவி இருக்கும். இது ஒரு எலக்ட்ரிக் எம்பிவி கார் ஆகும். அதாவது, அதிக எண்ணிக்கையிலான பயணிகளை இந்த காரில் அழைத்து செல்லலாம். விண்ட்சர் இவி காரின் முன்பக்கத்தில் செங்குத்தான டிசைனில் புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், அகலமான எல்இடி லைட் பார் வழங்கப்பட உள்ளது.

ஹெட்லைட்களை இணைக்கும் விதத்தில் வழங்கப்படும் அகலமான எல்இடி லைட் பாரை காரின் பின்பக்கத்திலும் எதிர்பார்க்கலாம். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட் ஆனது காரின் முகப்பு பகுதியில் இடதுப்பக்கத்தில் வழங்கப்படுகிறது. காரின் தோற்றத்திற்கு ஏற்ப கவர்ச்சிக்கரமான அலாய் சக்கரங்கள், ஸ்பாய்லர் மற்றும் பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
உட்புறம்: விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் எம்பிவி என அழைக்காமல், சியூவி (CUV) என அழைக்கிறது. இதற்கு காரணம், எம்பிவி காரை காட்டிலும் விண்ட்சர் இவி காரில் நன்கு விசாலமான உட்புற இடவசதி கிடைக்கும் என்பதினால் ஆகும். இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காருக்குள் கேபின் கருப்பு நிறத்தில் வழங்கப்பட உள்ளது.
ஆதலால், கேபினை சுற்றிலும் ஆங்காங்கே வண்ண விளக்குகள் நிச்சயமாக வழங்கப்படும். 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் 15.6 இன்ச்சில் நன்கு பெரிய அளவில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரினுள் வழங்கப்பட உள்ள சிறப்பம்சங்கள் ஆகும். இந்த காரில் பின் இருக்கைகளை 135 டிகிரி வரையில் தேவைக்கேற்ப மடக்கிக் கொள்ளலாம்.

பவர்டிரெயின்: வெளிநாடுகளில், எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் ஒரேயொரு எலக்ட்ரிக் மோட்டார் தான் பொருத்தப்படுகிறது. ஆனால், மோட்டாருக்கு ஆற்றலை வழங்கக்கூடிய பேட்டரியை நம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துக் கொள்ளலாம். இந்த இரு பேட்டரி ஆப்ஷன்களில் ஒன்று, 50.6kWh திறன் கொண்ட பேட்டரி ஆகும். இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 460கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
மற்றொன்று, 37.9kWh பேட்டரி ஆகும். இதன் ரேஞ்ச் 360கிமீ மட்டுமே ஆகும். இதில் எந்த பேட்டரி உடன் விண்ட்சர் இவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது? அல்லது வெளிநாடுகளை போன்று இந்தியாவில் 2 பேட்டரி ஆப்ஷன்களும் கொடுக்கப்பட உள்ளனவா? என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை செப்டம்பர் 11ஆம் தேதியில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
விற்பனையில் இந்த எம்ஜி எலக்ட்ரிக் காருக்கு பிஒய்டி இ6 எலக்ட்ரிக் கார் போட்டியாக உள்ளது. எம்ஜி விண்ட்சர் இவி காரின் தோற்றத்தில் விற்பனையில் உள்ள ஒரேயொரு எலக்ட்ரிக் கார் பிஒய்டி இ6 ஆகும். புதிய எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம்களை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் தீவிரமாக இருக்கும் நிறுவனங்களுள் எம்ஜி மோட்டாரும் ஒன்றாகும். டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக எம்ஜி மோட்டார் விளங்குகிறது. எம்ஜி மோட்டாரின் விற்பனையை விண்ட்சர் இவி மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








