இந்திய நிறுவனத்துடன் கை கோர்த்த பின்னர் இப்படி மாறிட்டாங்களே.. மலிவு விலை காரை கொண்டு வர துடிக்கும் எம்ஜி!
இந்தியாவில் மின்சார வாகனம் (EV)-களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இதன் விளைவாக புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு காப்புரிமை (Patent)ப் பெறுவதில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே பிரபல சீன கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி (MG Motor) இந்தியாவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் காருக்கான காப்புரிமையை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இந்த நிறுவனம் கோமெட் இவி மற்றும் இசட்எஸ் இவி என இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே புத்தம் புதிய ஓர் குட்டியான எலெக்ட்ரிக் காருக்கு அது காப்புரிமையைப் பெற்றிருக்கின்றது. அது என்ன கார் மாடல்?, அந்த காரின் சிறப்புகள் என்ன? மற்றும் தற்போது காப்புரிமை பெறப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலை எப்போது சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம் என்கிற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் ஏற்கனவே டாடா மோட்டார்ஸ்-க்கு மிக சிறப்பான போட்டியை எம்ஜி நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, டாடா மோட்டார்ஸின் டியாகோ இவி இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக விற்பனைச் செய்யப்பட்டு வந்த நிலையில், எம்ஜி நிறுவனம் கோமெட் இவி-யை விற்பனைக்கு அறிமுகம் செய்து அந்த இடத்தைத் தட்டி பறித்தது.
கோமெட் இவி 6.99 லட்சம் ரூபாய் எனும் விலைக்கே இந்த கார் விற்பனைச் செய்யப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மற்றுமொரு குட்டியான எலெக்ட்ரிக் காரை எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. அது ஓர் குட்டியான எலெக்ட்ரிக் காருக்கு காப்புரிமைப் பெற்றதன் வாயிலாகவே இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது.

பிங்குவோ ஈ.வி (Binguo EV), எனும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட குட்டி எலெக்ட்ரிக் காருக்கே எம்ஜி காப்புரிமைப் பெற்றிருக்கின்றது. இது ஓர் சப்-4 மீட்டர் ரக எலெக்ட்ரிக் காராகும். இதையே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜப்பானிய நிறுவனமான சுஸுகியும், இந்திய நிறுவனமான மாருதியும் இணைந்து இந்தியாவின் வாகன உலகை ஆட்சி செய்துக் கொண்டிருப்பதைப் போல, எம்ஜி மோட்டாரும், இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ-ம் (JSW) சமீபத்தில் இந்திய சந்தைக்காக கூட்டணியைத் தொடங்கின. இந்த கூட்டணியைத் தொடர்ந்து, ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு புதிய மின்சார வாகனத்தை (EV) அறிமுகப்படுத்துவதாகவும் அவர்கள் உறுதிமொழி பூண்டனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே பிங்குவோ இவி-க்கான காப்புரிமைப் பெறப்பட்டு இருக்கின்றது. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), பஞ்ச் இவி (Punch EV), சிட்ரோன் இசி3 (Citroen eC3) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 (Mahindra XUV400) ஆகியவற்றுடன் போட்டியிடும்.
குட்டியான தோற்றம்: பிங்குவோ இவி ஆனது 3,950 மிமீ நீளம், 1,708 மிமீ அகலம், 1,580 மிமீ உயரம் மற்றும் 2,560 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. இத்துடன் தாராளமாக 790 லிட் பூட் இட வசதியையும் அதுக் கொண்டிருக்கின்றது. எனவே, ஐந்து பேர் தாராளமாக இந்த காரில் டிராவல் செய்ய முடியும்.
அத்துடன், ஓரளவுக்கு தேவையான லக்கேஜ்களையும் ஏற்றிச் செல்ல முடியும். எஸ்ஜிஎம்டபிள்யூ (SGMW) குளோபல் ஸ்மால் எலெக்ட்ரிக் வாகனத் தளத்தில் கட்டப்பட்டதே இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. கோமெட் இவி (MG Comet EV) இல் வழங்கப்பட்டு இருக்கும் பல அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.
அதேவேளையில், தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்களை இந்த கார் கொண்டிருக்கின்றது. வளைந்த மற்றும் எக்ஸ் வடிவ எல்இடி லைட்களும் ஹெட்லைட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அவை பகல்நேரத்தில் ஒளிரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வீல்களைப் பொருத்த வரை 15 அங்குலத்திலேயே பயன்படுத்தப்பட இருக்கின்றது.
மேலும், சிறப்பு வசதியாக இந்த காரில் இரண்டு திரைகள், லெதர் போர்த்தப்பட்ட இருக்கை மற்றும் டாஷ்போர்டு இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், பாதுகாப்பான ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி பிங்குவோ இவி இந்தோனேசியா சந்தையில் மட்டுமே விற்பனையில் இருக்கின்றது.
அங்கு இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் விருப்பங்களில் அக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது: 31.9kWh பேட்டரியுடன் இணைக்கப்பட்ட 41 பிஎச்பி மோட்டார் 333கிமீ ரேஞ்ஜை வழங்கும் ஆப்ஷன் ஒன்றும், ஓர் முழு சார்ஜில் 410கிமீ ரேஞ்ஜ் தரும் 37.9kWh பேட்டரிபேக் மற்றும் 68 பிஎச்பி திறன் கொண்ட மோட்டார் ஆப்ஷன் ஒன்றும் ஆகும். இதே திறன்களுடனேயே இந்திய சந்தையிலும் பிங்குவோ இவி எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 2025ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் இவி-யைப் போலவே இந்த காரும் சற்று குறைவான விலையிலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 7லட்சம் ரூபாய் முதல் 8லட்சம் ரூபாய் வரை இந்த காரின் ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று மலிவான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் எனில் பிங்குவோ இவி ஓர் கட்டாயத் தேர்வாக மாறக்கூடும். மேலும், நுழைவு நிலை எலெக்ட்ரிக் கார் பிரிவில் வெற்றிகரமான கார் மாடலாகவும் அது மாறக்கூடும்.


Click it and Unblock the Notifications








