நாளை அறிமுகமாக இருக்கும் மற்றுமொரு கார்... கவுண்டவுன் தொடங்கியாச்சு! இந்த காருல ஒரு குடும்பமே போகலாம்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) நாளைய தினம் அதன் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் (Hatchpack) கார் மாடல்களில் சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களாக ஆல்டோ கே10 (Alto K10), எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) மற்றும் செலிரியோ (Celerio) ஆகியவையே இருக்கின்றன. இதிலேயே டிரீம் சீரிஸ் எனும் சிறப்பு பதிப்பை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி-யை போலவே மற்றுமொரு கார் உற்பத்தி நிறுவனம் நாளைய தினம் அதன் சிறப்பு பதிப்பு கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நிறுவனம் எது? அது எந்த கார் மாடலின் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது? சிறப்பு பதிப்பு என்றால் அதில் என்னமாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெற இருக்கின்றன? இதுமாதிரியான கேள்விகளுக்கான பதிலையே இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக எம்ஜி நிறுவனமே நாளைய தினம் அதன் குறிப்பிட்ட கார் மாடலின் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக குளோஸ்டர் இருக்கின்றது. இந்த கார் மாடலின் சிறப்பு பதிப்பே நாளைய தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் டீசர் படத்தை எம்ஜி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு காரின் வருகை டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் கார் மாடலுக்கு மிக சிறந்த போட்டியாக அமையும். எம்ஜி குளோஸ்டர் ஓர் பிரமாண்ட உருவம் கொண்ட எஸ்யூவி ரக காராகும்.
இந்த காரில் மூன்று வரிசைகளில் இருக்கை வழங்கப்பட்டு இருக்கும். குறைவான குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு குடும்பம் தாராளமாக அமர்ந்து இந்த காரில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், தற்போது சிறப்பு பதிப்பு எம்ஜி குளோஸ்டரின் டீசர் படம் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றது.
அதன் படங்கள் அல்லது விபரங்கள் எதையுமே எம்ஜி வெளியிடவில்லை. ஆகையால், இந்த சிறப்பு பதிப்பு என்னமாதிரியான சிறப்புகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை எங்களால் துள்ளியமாக வழங்க முடியவில்லை. அதேவேளையில், வீல்கள், பக்கவாட்டை பார்க்க உதவும் கண்ணாடிகள், ஜன்னலைச் சுற்றி இருக்கும் பகுதி உள்ளிட்டவை முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது மட்டும் தெரிய வந்திருக்கின்றது.
இதுபோலவே இன்னும் பல அலங்கரிப்பை இந்த கார் தாங்கியிருக்கும் என கூறப்படுகின்றது. நாளைய தினமே அது என்ன மாதிரியான அலங்கரிப்பு மற்றும் சிறப்பு வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது தெரிய வரும். அதேநேரத்தில் அலங்காரம் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளில் மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு வழக்கமான எம்ஜி குளோஸ்டரைக் காட்டிலும் மேம்பட்டுக் காணப்படும்.
உருவம், எஞ்சின் போன்ற முக்கிய விஷயங்களில் வழக்கமான பதிப்பு மற்றும் நாளை அறிமுகமாக இருக்கும் சிறப்பு பதிப்பு இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும். இப்போதைய நிலவரப்படி எம்ஜி குளோஸ்டர், அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காக ஓர் முன்னணி கார் மாடலாக அறியப்படுகின்றது.
இந்த காரில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் முதல் தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் வரை என பல அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது பாதுகாப்பான மற்றும் வசதியான இயக்க அனுபவத்தை வழங்கும். மேலும், இந்த எஸ்யூவி காரில் லெவல் 1 தன்னியக்க ஓட்டுநர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இது, புறப்படும் எச்சரிக்கை மற்றும் ஆக்டிவ் பார்க் அசிஸ்ட் போன்ற அம்சங்களை வழங்கும் திறன் கொண்டது. இது மேலும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், வாய்ஸ் கமெண்ட் மற்றும் ஐ-ஸ்மார்ட் (i-SMART) தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர கூடுதலாக பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பலதரப்பட்ட அம்சங்களைத் தாங்கிய கார் மாடலிலேயே சிறப்பு பதிப்பு நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே இந்த காரின் இருப்பு இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு மிகப் பெரிய தலை வலியாக இருந்து வருகின்றது. இந்தியாவில் பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த கார் மாடலாக இது மாறியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே எம்ஜி குளோஸ்டரின் சிறப்பு பதிப்பு விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஃபார்ச்சூனருக்கு இன்னும் கூடுதல் போட்டியான சூழலை உருவாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








