எஸ்யூவி ரக காரைவிட பெருசா இருக்கும்.. இந்தியாவில் முதல் முறையாக காட்சி தந்த பெரிய உருவம் கொண்ட மர்ம கார்!
விற்பனையிலேயே இல்லாத கார் மாடல் ஒன்று முழுமையான மறைப்புகளுடன் இந்திய சாலைகளில் வலம் வந்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, அந்த கார் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் தயாரிப்பு என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், அது என்ன கார் மாடல் என்பது தெரியவில்லை. இருப்பினும், காரின் பக்கவாட்டு பகுதியில் இன்டலிஜென்ட் சியூவி (Intelligent CUV) என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக இந்த வாகனம் சியூவி ரக கார் என்பது தெரிய வந்திருக்கின்றது.
எஸ்யூவி (SUV), எம்பிவி (MPV)-யைப் போல சியூவி என்பதும் ஓர் ரகம் ஆகும். தற்போது வலம் வந்துக் கொண்டிருக்கும் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனில் அதுவே நாட்டின் முதல் சியூவி ரக காராக இருக்கும். இந்தியர்களை தன் வசம் வளைத்து போடும் முயற்சியில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

இதன் அடிப்படையில் அது பல்வேறு வேலைகளை நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நிதியுதவி (வாகன லோன்) கிடைக்கும் விதமாக டாடா கேபிடல் (Tata Capital) உடன் அது கூட்டணியை வைத்தது. இந்த கூட்டணி புதிதாக வாகனம் வாங்க வருபவர்களுக்கு நிதியுதவியை வழங்குவதோடு, டீலர்கள் அவர்களை மேம்படுத்திக் கொள்ளவும் நிதியுதவியை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மாதிரியான சூழலிலேயே புதுமுக காரை இந்தியாவில் வைத்து சோதனையோட்டம் செய்யத் தொடங்கி இருக்கின்றது, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார். இந்த நடவடிக்கையின் வாயிலாக அந்நிறுவனம் நாட்டில் புதுமுக வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதிலும் தீவிரமாக இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. எம்ஜி நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு புதிய வாகனத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஆகையால், தற்போது காட்சிக்குள்ளாகி இருக்கும் இந்த சியூவி ரக கார் வெகு சீக்கிரமே இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) பிரிவேலேயே விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கின்றது. ஆமாங்க, இந்த வாகனம் ஓர் மின்சார வாகனம் ஆகும்.
இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் ஏற்கனவே இசட்எஸ் இவி (ZS EV) மற்றும் இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக கோமெட் இவி (Comet EV) ஆகியவற்றை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே விரைவில் இந்த சியூவி ரக காரும் இணைய உள்ளது.

Source: Rushlane வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்த காரை எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வரும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விற்பனைக்கு வரும்போது புதிய பெயரிலேயே அந்த கார் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது. எக்ஸலர் இவி (Excelor EV) எனும் பெயரில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் எம்ஜி நிறுவனம் இந்த பெயருக்கு வர்த்தக முத்திரையை பதிவு செய்திருந்தது. இதனாலேயே இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காரின் தோற்றம் பெரிய உருவம் கொண்ட ஹேட்ச்பேக் ரக காரைப் போல உள்ளது. அதேவேளையில், கிராஸோவர் ரக கார்களின் தோற்றத்தையும் இது பிரதிபலிக்கின்றது. ஆனால், இது சியூவி ரக காராகும்.
இந்த வகை வாகனங்கள் அதிக இருக்கை, அதோடு அதிக லக்கேஜை ஏற்றிச் செல்வதற்கு ஏதுவான அமைப்பைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியர்கள் மத்தியில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க அதன் பெரிய உருவம், அதிக இட வசதி உள்ளிட்டவையே காரணமாக இருக்கின்றன.
இந்த அனைத்தையும் இன்னும் மிக தாராளமாக வழங்கக் கூடிய காராக சியூவி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த காரின் நீளம் தோராயமாக 4.3 மீ முதல் 4.5 மீ வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, காற்றை கிழித்துக் கொண்டு செல்வதற்கு ஏதுவான அமைப்பையும் இந்த கார் கொண்டிருக்கின்றது.
ஆகையால், எரிபொருள் சிக்கனம் விஷயத்தில் மிக சிறப்பான வாகனமாகவும் இது இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. எம்ஜி நிறுவனம் இந்த காரை தன்னுடைய மற்ற தயாரிப்புகளைப் போல அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனமாக விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.
அந்தவகையில், ஒரு பெரிய பனோரமிக் சன்ரூஃப், பெரிய ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் திரை, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், சர்குலர் ஸ்டீயரிங் கன்ட்ரோல் பாட்கள் மற்றும் வட்டமான ரியர் ஏசி வென்ட்கள் போன்றவை இந்த புதுமுக காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதேநேரத்தில் மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி பேக் விஷயத்தில் இந்த கார் எம்ஜி நிறுவனத்தின் புகழ் பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடலான இசட்எஸ் இவி-யை தழுவியதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 500கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்ட 50kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், 175பிஎச்பி மற்றும்280 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் மின்சார மோட்டாரே பன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி இசட்எஸ் இவியின் இந்த மாதிரியான திறன்களுடனேயே சியூவி ரக காரும் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இப்போதே சோதனையோட்டம் தொடங்கி இருப்பதால் விரைவில் இதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









