கத்து குட்டிக்கு கிடைச்ச வாழ்க்கையை பாத்தீங்களா!! டாடாவையே இருக்க இடம் தெரியாம ஆக்கிவிடும் போலையே..
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India)-வும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்பு சென்ற 2024 நவம்பர் மாதத்தில் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆச்சரியம் என்ன என்றால் இந்த நிறுவனத்திற்கு அதன் மின்சார வாகனங்களே கை கொடுத்து இருக்கின்றது. மிக முக்கியமாக சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலுக்கு மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
விண்ட்ஸர் இவி (Windsor EV)-யே அந்த கார் மாடல் ஆகும். இது ஓர் சியூவி (CUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் முதல் மற்றும் ஒரே ஒரு சியூவி ரக கார் மடாலே இது ஆகும். இதன் காரணத்தினாலும், மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்ற காரணத்தினாலும் இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 2024 நவம்பர் மாதத்தில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனத்தின் கார்கள் 6,019 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இதில் 52.23 சதவீதம் விண்ட்ஸர் இவி எலெக்ட்ரிக் கார் மாடலே ஆகும். அதாவது, ஒட்டுமொத்த விற்பனையில் 3,144 யூனிட்டுகள் வரை விண்ட்ஸர் இவி-யே விற்பனையாகி இருக்கின்றன.
இந்த அளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருப்பதால் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக விண்ட்ஸர் இவி மாறி இருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்தியாவின் அனைத்து சாலைகளிலும் விண்ட்ஸர் இவி கார் மாடல் அதிகம் வலம் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனத்தின் இந்த கார் மாடல் மட்டுமல்ல ஒட்டுமொத்த வாகன விற்பனையும் விற்பனை வளர்ச்சியையேப் பதிவு செய்திருக்கின்றன. ஆண்டுடன் ஆண்டு ஒப்பிடுகையில் நவம்பர் 2024இல் பெற்றிருப்பது 44.90 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். நவம்பர் 2023-இல் வெறும் 4,154 யூனிட்டுகள் மட்டுமே எம்ஜி நிறுவனத்தின் கார்கள் விற்பனையாகின.
இந்த அளவு அதிகம் எம்ஜி கார்கள் விற்பனையானதற்கு சியூவி ரக கார் மாடலான விண்ட்ஸர் இவியே முக்கிய காரணமாக உள்ளது. இதைபோலவே மற்ற கார் மாடல்களும் நல்ல வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. முன்னதாக கூறியதைப் போல நிறுவனத்தின் மின்சார கார்களினாலேயே மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.
அந்தவகையில், கோமெட் இவி மற்றும் இசட்எஸ் இவி ஆகியவற்றிற்கும் மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. இதற்கு 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) திட்டமே காரணம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் எம்ஜி எலெக்ட்ரிக் காரை வாங்கும்போது பேட்டரிக்கான தொகையை நாம் செலுத்த வேண்டாம்.
அதேவேளையில், பேட்டரிக்கான தொகையை அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப செலுத்த வேண்டும். ஒரு கிலோ மீட்டர் பயன்பாட்டிற்கு ரூ. 2.5 தொடங்கி ரூ. 4.5 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. குறிப்பாக, விண்ட்ஸர் இவி-யை இந்த சேவையின்கீழ் வாங்கினால் கிமீட்டருக்கு 3 ரூபாய் மற்றும் 50 காசுகளை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இத்தகைய திட்டத்தின்காரணமாகவே விண்ட்ஸர் இவிக்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் ரூ. 9.99 லட்சம் என்கிற விலையிலேயே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டம் வேண்டாம், பேட்டரியுடன் அந்த கார் வேண்டும் என நினைத்தால் கூடுதலாக ரூ. 3.5 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் எனும் மகுடத்தை நெக்ஸான் இவியே சூடியிருந்தது. இந்த இடத்தையே அதிக எண்ணிக்கை விற்பனையின் வாயிலாக தற்போது விண்ட்ஸர் இவி சூடியிருக்கின்றது. வரும் நாட்களில் நெக்ஸான் விற்பனையையே மழுங்கச் செய்யும் அளவிற்கு இது விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








