மாருதியை ஓட ஓட விரட்ட முடிவு பண்ணிட்டாங்க.. அதன் இடத்தை பிடிக்க கை கோர்த்த இந்தியா-சீனா நிறுவனங்கள்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் இடத்தைப் பிடிக்க மாருதியை போலவே ஓர் தரமான சம்பவத்தை இந்திய நிறுவனம் ஒன்று செய்திருக்கின்றது. அதாவது, இந்திய நிறுவனமான ஜஎஸ்டபிள்யூ (JSW), சீன நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஜி மோட்டார் (MG Motor) கார் உற்பத்தி நிறுவனத்துடன் கை கோர்த்து இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் எஸ்ஏஐசி மோட்டார் (SAIC Motor). உலக அளவில் 500-க்கும் அதிகமான நிறுவனங்களை இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. மேலும், இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானமாக 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கின்றன. இத்தகைய பிரமாண்ட நிறுவனத்திற்கு சொந்தமானதே எம்ஜி மோட்டார் (MG Motor) ஆகும்.

முன்னதாக இந்த எம்ஜி நிறுவனம் இங்கிலாந்தை தாயமாகக் கொண்டு இயங்கி வந்தது. இந்த நிலையிலேயே சீன நிறுவனத்தின் கைகளுக்கு மாறியது எம்ஜி. இப்போது சீன நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனமே நமது இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் கை கோர்த்து இருக்கின்றது.
இந்திய சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தை மிகப் பெரியதாக மாற்றும் பொருட்டே இந்த கூட்டணியை அது மேற்கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனங்களின் இணைவு நிகழ்வே இன்றைய தினம் (மார்ச் 20) இந்தியாவில் அரங்கேறியது. இவர்கள் இணைவு நிகழ்வை மேலும் சிறப்பானதாக மாற்றும் பொருட்டு இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்புகளில் ஒன்றான சைபஸ்ர் (Cyberster Electric Sportscar) எனும் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான நாள் இன்னும் பல கிமீ தூரத்திற்கு அப்பாலேயே இருக்கின்றது. அதேவேளையில், இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் வேறு சில புதுமுக கார்களைத் தொடர்ச்சியாகக் களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றன. அந்தவகையில் ஒவ்வொரு மூன்று முதல் 6 மாதங்களுக்கு ஒரு புதிய காரை ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி கூட்டணி அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இரு நிறுவனங்களும் இணைந்து எலெக்ட்ரிக் கார்களையும் அதிகளவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு நிறுவனங்களின் இணைவை அடுத்து தற்போது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் (JSW MG Motor India PVT LTD) என நிறுவனத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்த பிராண்டின்கீழ் முதல் வாகனம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. மேலும், இப்போதைய நிலவரப்படி எம்ஜி நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையின் ஆண்டு உற்பத்தி எண்ணிக்கை ஒரு லட்சம் யூனிட்டுகளாக இருக்கின்றன. இதனை ஆண்டுக்கு 3 லட்சங்களாக உயர்த்தவும் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன.
இந்தியாவை ஆதிக்கம் செய்ய உற்பத்தி திறனை இதுபோன்று அதிகப்படுத்துவது மிக முக்கியமானதாக நிறுவனங்கள் கருதுகின்றன. மேலும், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் கியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய அளவில் போட்டியை வழங்கவும் இது மிகப் பெரிய திட்டங்களை வகுத்து வருகின்றது.
குறிப்பாக, மாருதி சுஸுகிக்கு கடுமையான போட்டியை வழங்க அதன் பாணியையே இந்த நிறுவனங்கள் கையில் எடுத்திருக்கின்றன. இந்திய நிறுவனமான மாருதி, ஜப்பான் நிறுவனமான சுஸுகி உடன் இணைந்து இந்தியாவை ஆளுகைச் செய்துக் கொண்டிருப்பதைப் போலவே இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ, சீன நிறுவனமான எம்ஜி உடன் கை கோர்த்து இருக்கின்றது.
இந்த கூட்டடணி மாருதி சுஸுகியை போலவே வெற்றி பெறுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜேஎஸ்டபிள்யூ காட்சிப்படுத்தி இருக்கும் புதிய சைபர்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் கார் ஓர் முழு சார்ஜில் 580 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதனை கான்செப்ட் மாடலாக முதன் முதலில் 2021 ஆம் ஆண்டில் எம்ஜி காட்சிப்படுத்திய நிலையில், அதன் உற்பத்திக்கு தயாரான வெர்ஷனை '2023 குட்உட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு' எனும் நிகழ்வின் வாயிலாக காட்சிப்படுத்தியது.
சிங்கிள் மோட்டார், ரியர் வீல் டிரைவ் மற்றும் டூயல் மோட்டார், அனைத்து வீல் இயக்கம் என இரு விதமான ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்கும். இதன் சிங்கிள் மோட்டார் தேர்வு அதிகபட்சமாக 304 பிஎச்பி பவரை வெளியேற்றும். அதேவேளையில், இதன் டூயல் மோட்டார் வசதிக் கொண்ட தேர்வு 528 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும்.
இதனால் வெறும் 3.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடவும் முடியும். இத்தகைய தரமான காரையே தங்களின் இணைவு நிகழ்வு இன்னும் பிரத்யேகமானதாக மாற்றும் பொருட்டு ஜேஎஸ்டபிள்யூ மற்றும் எம்ஜி நிறுவனங்கள் இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜேஎஸ்டபிள்யூ மற்றும் எம்ஜி இணைவால் இந்த நிறுவனங்களின் தயாரிப்பு இன்னும் பலமடங்கு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எவ்வளவு குறைவான விலையில் அது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை. கூட்டணியின்கீழ் தயாரிக்கப்படும் முதல் தயாரிப்பு விற்பனைக்கு வந்த பின்னரே அது தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








