எஸ்யூவி கார்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க போகும் கார் மாடலுக்கு புக்கிங் தொடங்கியது.. அறிமுக நாள் பக்கத்தில்!
எம்ஜி (MG) நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்றே அரங்கேற இருக்கின்றது. இந்த நிலையிலேயே, எம்ஜி கார் விற்பனையாளர்கள் சிலர் இந்த கார் மாடலுக்கான புக்கிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் என்பது கவனிக்கத்தகுந்தது. விரைவில், நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ புக்கிங்கைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, விண்ட்ஸர் இவியின் வருகை உறுதி செய்யப்பட்டுவிட்ட காரணத்தினால் எம்ஜி கார் விற்பனையாளர்கள் சிலர் விண்ட்ஸர் இவி-க்கான புக்கிங்கைத் தொடங்கி இருக்கின்றனர். இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் மின்சார கார் பிரிவின்கீழ் கோமெட் இவி மற்றும் இசட்எஸ் இவி ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் வரிசையிலேயே மூன்றாவதாக விண்ட்ஸர் இவி இணைக்கப்பட இருக்கின்றது. உருவத்தில் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களின் கலவையாக காட்சியளிக்கும், இது ஓர் சியூவி ரக கார் மாடல் ஆகும். மேலும், விண்ட்ஸர் இவி விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவின் முதல் சியூவி ரக கார் மாடலாக இதுவே இருக்கும்.
இதன் உட்பக்கத்தில் பயணிகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்குமோ, அதேபோல் அதிக லக்கேஜ்களைக் கையாள்வதற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இக்காரில் இருக்கும் இருக்கைகள் பல முழுமையாக மடித்துக் கொள்ளும் திறனைக் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து, இந்த கார் பெரிய பனோரமிக் சன்ரூஃப் இடம் பெற இருப்பதும், கருப்பு-தங்க நிறத்தால் இதன் கேபின் அலங்கரிக்கப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. இதுதவிர, இந்த காரில் 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட இருக்கின்றது. இதை சமீபத்திய டீசர் படம் வாயிலாகவே எம்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்தோனேசியாவில் விற்பனையில் இருக்கும் விண்ட்ஸர் இவி-யில் இந்த அம்சம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை உலக சந்தையில் விற்பனையில் விண்ட்ஸர் இவி பெற்றிருக்கின்றது. அந்தவகையில், 8.8 அங்குல டிஜிட்டல் டிரைவர்களுக்கான இருக்கை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்டு சீட், பன்முக வண்ணங்களில் ஒளிரும் வசதிக் கொண்ட ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பவர் டெயில்கேட் ஆகிய அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.
பிரீமியம் மற்றும் நவீன கால தொழில்நுட்பங்களைப் போலவே பாதுகாப்பிலும் இந்த கார் தலை சிறந்த வாகனமாக இருக்கும் என கூறப்படுகின்றது. 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் மிக முக்கியமாக அடாஸ் அம்சம் ஆகியவையே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
பேட்டரி பேக்கை பொருத்த வரை இந்த காரில் 50.6 kWh மற்றும் 37.9 kWh ஆகிய இரண்டே எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், இதற்கு ரூ. 20 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகின்றது. ஆனால், இந்த காரின் விலை மற்றும் அதுபற்றிய முக்கிய விபரங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக எம்ஜி அறிவிக்கவில்லை. விரைவிலேயே இதுபற்றிய தகவல் அனைத்தையும் எம்ஜி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி மற்றும் சுஸுகி இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதைப் போல சீன நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஜி-யும், இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூம் சந்தைக்காக இணைந்திருக்கின்றன. இவர்களின் இணைவின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கும் முதல் எலெக்ட்ரிக் ரக கார் மாடலே இதுவாகும்.


Click it and Unblock the Notifications








